Showing posts with label தீ. Show all posts
Showing posts with label தீ. Show all posts

Thursday, December 25, 2008

மறுமை நாளில் மனிதர்களின் நிலை.

1817. ''நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் 'இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் 'அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 6527 ஆயிஷா (ரலி).

1818. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின் வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (திருக்குர்ஆன் 21:104). மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சில பேர் இடப்பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்'' என்பேன். அப்போது அல்லாஹ் 'இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்பான். அப்போது நான், நல்லடியார் (நபி ஈஸா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று 'நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்'' (திருக்குர்ஆன் 05:117) என்று சொல்வேன். அப்போது 'இவர்கள் தம் குதிகால்(சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும்.

புஹாரி : 6526 இப்னு அப்பாஸ் (ரலி).

1819. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள்.அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும் போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீஅவர்களுடனேயே இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6522 அபூஹூரைரா (ரலி).

Saturday, August 02, 2008

நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதன் உதாரணம்.

1471. 'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்)புகட்டினர் விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது.அது(ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .

புஹாரி :79 அபூ மூஸா(ரலி) .

1472. என்னுடைய நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளிவீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை (தீயில் விழாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். (ஆனால்,) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவதிலிருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6483 அபூஹூரைரா (ரலி).

Monday, May 05, 2008

மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.

1310. இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.

புஹாரி :3307 ஜாபிர் (ரலி).


1311. நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


புஹாரி : 6293 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).


1312. மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது 'நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்'' என்றார்கள்.

புஹாரி : 6294 அபூமூஸா (ரலி).