Showing posts with label மறுமை. Show all posts
Showing posts with label மறுமை. Show all posts

Sunday, January 18, 2009

முகஸ்துதி தவிர்.

1880. நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன்.

புஹாரி : 6499 ஜூன்துப் (ரலி).

Wednesday, January 07, 2009

தஜ்ஜாலுக்கு மதீனாவில் நுழையத் தடை.

1858. தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!'' என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களைநோக்கி), 'நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'கொள்ள மாட்டோம்!'' என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!'' என்று கூறுவார். தஜ்ஜால்' நான் இவரைக் கொல்வேன்!'' என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1882 அபூ ஸயீத் (ரலி).

1859. நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், 'அவனால் உமக்கென்ன தீங்கு?' என்று கேட்டார்கள். நான், '(அச்சம் தான்.) ஏனெனில், தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'இது என்ன (பிரமாதம்)? (அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே'' என்றார்கள்.

புஹாரி : 7122 அல்முகீரா பின் ஷூஹ்பா (ரலி).

1860. ''மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நில நடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1881 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1861. யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமை நாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

புஹாரி : 7067 இப்னு மஸ்ஊத் (ரலி).

1862. தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறக் கேட்டேன்.

புஹாரி :4936 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).

1863. நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டையும் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6504 அனஸ் (ரலி).

Saturday, January 03, 2009

ஹிஜாஸ் பகுதியில் நெருப்பு கிளம்புதல்.

1839. ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாதவரை மறுமைநாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7118 அபூஹுரைரா (ரலி).

Friday, December 26, 2008

கியாம நாளின் திகில்கள்.

1820. நபி (ஸல்) அவர்கள், '(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்'' எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) இறை வசனத்தை ஓதிவிட்டு, 'அன்று தம் இரண்டு காதுகளின் பாதிவரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப்போய் விடுவார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4938 இப்னு உமர் (ரலி).

1821. மறுமை நாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6532 அபூஹுரைரா (ரலி).

Thursday, December 25, 2008

மறுமை நாளில் மனிதர்களின் நிலை.

1817. ''நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் 'இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் 'அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 6527 ஆயிஷா (ரலி).

1818. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின் வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (திருக்குர்ஆன் 21:104). மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சில பேர் இடப்பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்'' என்பேன். அப்போது அல்லாஹ் 'இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்பான். அப்போது நான், நல்லடியார் (நபி ஈஸா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று 'நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்'' (திருக்குர்ஆன் 05:117) என்று சொல்வேன். அப்போது 'இவர்கள் தம் குதிகால்(சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும்.

புஹாரி : 6526 இப்னு அப்பாஸ் (ரலி).

1819. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள்.அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும் போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீஅவர்களுடனேயே இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6522 அபூஹூரைரா (ரலி).

Thursday, December 04, 2008

மறுமை நாள். சொர்க்கம் நரகம்

1773. மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4729 அபூஹுரைரா (ரலி).

1774. யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, 'நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்'' என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, 'அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.

புஹாரி 4811 இப்னு மஸ்ஊத் (ரலி).

1775. அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6519 அபூஹுரைரா (ரலி).

1776. அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு 'நானே அரசன்!'' என்று சொல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7412 இப்னு உமர் (ரலி).

Sunday, November 16, 2008

அல்லாஹ்விடம் இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டுதல்.

1723. நபி (ஸல்) அவர்கள் 'ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்'' என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

புஹாரி :6389 அனஸ் (ரலி).

Sunday, October 19, 2008

விசுவாசியைத் திட்டாதே.

1673. நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றி விடுவாயாக!'' என்று கூறியதை செவியுற்றேன்.

புஹாரி :6361 அபூஹூரைரா (ரலி).

Wednesday, October 15, 2008

அநீதி தவிர்.

1666. அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2447 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1667. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2442 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1668. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'' என்று கூறிவிட்டு, பிறகு, 'மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

புஹாரி :4686 அபூமூஸா (ரலி).