Showing posts with label மக்கா. Show all posts
Showing posts with label மக்கா. Show all posts

Tuesday, January 27, 2009

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து....

1892. அபூபக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், 'இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சொன்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, 'அபூபக்ரே! நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) கூறினார்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து கொள்வோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகி விட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. எனவே, நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன் மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்'' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியது போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே, 'நீ யாருடைய பணியாள்? இளைஞனே!'' என்று கேட்டேன். அவன், 'மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)'' என்று அல்லது மக்காவாசிகளில் ஒருவரின் (பணியாள்) என்று பதிலளித்தான். நான், 'உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா?'என்று கேட்டேன். அவன், 'ஆம் (இருக்கிறது)'' என்று சொன்னான். நான், 'நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?' என்று கேட்டேன். அவன், 'சரி (கறக்கிறேன்)'' என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், '(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக் கொள்'' என்று சொன்னேன். -அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்: தம் இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ (ரலி) அவர்களை கண்டேன். அவன், உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகத்தை தணித்துக் கொண்டு, உளூச் செய்து கொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும், ஒன்றாக அமைந்து விட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப் பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், 'பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும் வரை பருகினார்கள். பிறகு, '(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (வந்துவிட்டது)'' என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா இப்னுமாலிக் தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் முஸ்லிமாகியிருக்கவில்லை.) நான், '(எதிரிகள்) நம்மிடம் வந்து சேர்ந்து விட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சுராகாவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே, சுராகாவுடன் அவரின் குதிரை தன் வயிறு வரை பூமியில் புதைந்து விட்டது. அறிவிப்பாளர் ஸுஹைர் இப்னு முஆவியா (ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: 'பூமியின் ஓர் இறுகிய பகுதியில்'' என்று (அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்கள் என) கருதுகிறேன். உடனே சுராகா, 'நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக கருதுகிறேன். எனவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களை விட்டுத் திசைதிருப்பி விடுவேன்'' என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தன்னைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், 'உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை'' என்று கூறலானார். மேலும், (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பியனுப்பிக் கொண்டேயிருந்தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்.

புஹாரி :3615 அல்பராவு பின் ஆஸிஃப் (ரலி).

Wednesday, January 07, 2009

தஜ்ஜாலுக்கு மதீனாவில் நுழையத் தடை.

1858. தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!'' என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களைநோக்கி), 'நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'கொள்ள மாட்டோம்!'' என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!'' என்று கூறுவார். தஜ்ஜால்' நான் இவரைக் கொல்வேன்!'' என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1882 அபூ ஸயீத் (ரலி).

1859. நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், 'அவனால் உமக்கென்ன தீங்கு?' என்று கேட்டார்கள். நான், '(அச்சம் தான்.) ஏனெனில், தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'இது என்ன (பிரமாதம்)? (அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே'' என்றார்கள்.

புஹாரி : 7122 அல்முகீரா பின் ஷூஹ்பா (ரலி).

1860. ''மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நில நடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1881 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1861. யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமை நாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

புஹாரி : 7067 இப்னு மஸ்ஊத் (ரலி).

1862. தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறக் கேட்டேன்.

புஹாரி :4936 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).

1863. நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டையும் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6504 அனஸ் (ரலி).

Wednesday, December 10, 2008

சந்திரன் பிளத்தல்.

1784. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்'' என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.

புஹாரி : 3636 இப்னு மஸ்ஊத் (ரலி).

1785. மக்காவாசிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.

புஹாரி : 3637 அனஸ் (ரலி).

1786. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவு பட்டது.

புஹாரி : 3638 இப்னு அப்பாஸ் (ரலி).

Tuesday, September 30, 2008

இரட்டை ஹிஜ்ரத் வாசிகள்.

1627. நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டு விட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூ ருஹ்கி ஆவார். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ புர்தா ஆமிர் இப்னு அபீ மூஸா (ரஹ்) கூறினார்: ''என்னுடைய (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்'' என்றோ 'ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம் என்றோ (என் தந்தை அபூ மூஸா (ரலி)) கூறினார்கள். நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டு சென்று) இறக்கி விட்டது. (அபிசினியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்னெவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, 'உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டோம்'' என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். பிறகு உமர் (ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அஸ்மா அவர்களைக் கண்டபோது, 'இவர் யார்?' என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். '(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்'' என்று ஹஃப்ஸா (ரலி), 'இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம்'' என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் (ரலி), 'உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில்... அல்லது பூமியில்... இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவு மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்'' என்று கூறினார்கள். 'அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்'' என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4230-4231 அபூ மூஸா (ரலி).

Monday, September 29, 2008

அபூமூஸா (ரலி) அபூஆமிர் (ரலி) சிறப்புகள்.

1623. மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே 'ஜிஃரானா' என்னுமிடத்தில் பிலால் (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன். அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல் - அவர்களிடம்) வந்து, 'நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'நற்செய்தியைப் பெற்றுக் கொள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லி விட்டீர்களே!'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தவரைப் போன்று என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். 'இவர் (என்னுடைய) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இருவரும், 'நாங்கள் ஏற்றுக் கொண்டோம்'' என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள் பிறகு (எங்களிடம்), 'இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு, 'உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, '(இறை நம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.

புஹாரி : 4328 அபூமூஸா (ரலி).

1624. நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அபூ அமீர் அவர்களை (தளபதியாக்கி) 'அவ்தாஸ்' பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அப்போது அபூ ஆமிர் அவர்கள் (கவிஞன்) 'துரைத் இப்னு ஸிம்மா'வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூ ஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களின் முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, 'என் தந்தையின் சகோதரரே! உங்களின் மீது அம்பெய்தவன் யார்?' என்று கேட்டேன். 'என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!'' என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே, '(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா?' என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆமிர் அவர்களிடம் (சென்று), 'உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்'' என்று கூறினேன். பிறகு, (''என்னுடைய முழங்காலில் பாய்திருக்கும்) இந்த அம்மைப் பிடுங்கியெடு'' என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. 'என் சகோதரரின் மகனே! நபி (ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு'' என்று அபூ ஆமிர் (ரலி) கூறினார். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமீர் (ரலி) (வீர) மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தங்களின் வீட்டில் (பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. (எனினும்) கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரண்டு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும், அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, 'இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன். உடனே நான், 'எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இறைவா! அப்துல்லாஹ் இப்னு கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அபூபுர்தா (ரலி) கூறினார்: (நபி - ஸல் - அவர்கள் புரிந்த இரண்டு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூ அமீர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.

புஹாரி : 4323 அபூமூஸா (ரலி).

1625. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும்போது அவர்கள் குர்ஆன் ஒதும் ஒசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான்பார்த்திருக்கா விட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார் அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அல்லது எதிரிகளைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றார் என்று (துணிவோடு) கூறுவார் என்று கூறினார்கள்.

புஹாரி : 4232 அபூமூஸா (ரலி).

1626. அஷ்அரீ குலத்தினரின் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2486 அபூமூஸா (ரலி).

Sunday, September 28, 2008

நபித்தோழர் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்களின் சிறப்பு.

1622. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), 'கடிதத்தை வெளியே எடு'' என்று கூறினோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை'' என்று கூறினாள். நாங்கள், 'ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்'' என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்'' என்றார்கள்.

புஹாரி : 3007 அலீ(ரலி).

Saturday, September 20, 2008

அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்களின் சிறப்பு.

1607. அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரிடம், 'இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, 'வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகிற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகிற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரின் சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா!'' என்று கூறினார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு, அபூதர்ரிடம் திரும்பிச் சென்று, 'அவர் நற்குணங்களைக் கைக் கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை பார்த்தேன். ஒரு வாக்கையும், (செவியுற்றேன்) அது கவிதையாக இல்லை'' என்று கூறினார். அபூதர், 'நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை'' என்று கூறிவிட்டு, பயண உணவு எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தன்னுடைய தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூதர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றனர். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ - ரலி - அவர்கள் அபூதர்ரிடம், 'வீட்டுக்கு வாருங்கள்'' என்று சொல்ல) அபூதர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும்வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல்பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவரைக் கடந்து சென்றார்கள். 'தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா?' என்று கேட்டுவிட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியம் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்தபோது அலீ (ரலி) அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்கவைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), 'நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?' என்று கேட்டார்கள். அவர், '(நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன்'' என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி), 'அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் இறைத்தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகிற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போன்று நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள்'' என்று கூறினார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலி அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி), நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீங்கள் உங்கள் (கிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள். அபூதர், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இச்செய்தியை (இறைமறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன்'' என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) என்றும் உறுதி சொல்கிறேன்'' என்று கூறினார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) வந்து, அவரின் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். 'உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும்வழி (கிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா?' என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவரின் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போன்றே) அப்பாஸ் (ரலி) அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்தார்கள்.

புஹாரி : 3861இப்னு அப்பாஸ்(ரலி).

Sunday, August 17, 2008

முதல் வஹியின் போது நபிகளாரின் வயது.

1514. அனஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்படலாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்து வந்தார்கள். மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலேயே இறந்து விட்டார்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி :3547 ரபிஆ பின் அபீஅப்துர் ரஹ்மான் (ரலி).

Wednesday, July 30, 2008

நபி (ஸல்) அவர்களின் கனவுகள்.

1463. 'நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது, 'வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!' என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''

புஹாரி : 246 இப்னு உமர் (ரலி).

1464. நான் மக்கா நகரைத் துறந்து அங்கிருந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி 'யமாமா'வாகவோ 'ஹஜரா'கவோ தான் இருக்கும் என்று நான் எண்ணினேன். ஆனால், அது யஸ்ரிப் -மதீனாவாகிவிட்டது. மேலும், இந்த என்னுடைய கனவில் நான் (என்னுடைய) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை உடைந்து விடுவதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போதுமுஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்தபடியே மீண்டும் (ஒட்டி) அழகாகியது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளைமாடுகளை பார்த்தேன். (உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த அந்தஸ்து (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்ததாகும்.எனவே, (அந்த மாடுகள்) உஹுதுப் போரின்போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3622 அபூ மூஸா(ரலி).

1465. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத் தூதர் என்று வாதிட்ட) 'முஸைலிமா' எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், 'முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்'' என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்சமட்டைத் துண்டு ஒன்று இருந்தது.

முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, 'இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச்செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர்தாம் ஸாபித் இவர் என் சார்பாக உனக்கு பதிலளிப்பார்'என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன்'' என்று (முஸைலிமாவிடம்) சொன்னார்கள்

புஹாரி :4373 இப்னுஅப்பாஸ் (ரலி).

1466. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனவே, கனவில் அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதினேன். உடனே, அவ்விரண்டும் பறந்துவிட்டன. எனவே, நான் அவ்விரண்டுக்கும் 'எனக்குப் பின் வெளிப்படவிருக்கிற மகா பொய்யர்கள் இருவர்' என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் அன்ஸீ மற்றொருவன் முஸைலிமா என்று கூறினார்கள்.

புஹாரி :4374 அபூஹூரைரா (ரலி).

1467. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்'' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்'' என்றனர்.

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், 'இவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள்,'செல்லுங்கள், செல்லுங்கள்'' என்று என்னிடம் கூறினர். அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்து வைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், 'இவ்விருவரும் யார்?' என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், 'இவர் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்'' என்று கூறினர். அப்படியே நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், 'இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், 'அதில் ஏறுங்கள்'' என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காண்கிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்'' என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசிங்கம் நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பி வந்தனர்.அவ்விருவரும் என்னிடம், 'இது (-இந்த நகரம்) தான் 'அத்ன்' எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்'' என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், 'இது உங்கள் இருப்பிடம்'' என்றனர். நான் அவர்களிடம், 'உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்'' என்றேன். அவ்விருவரும், 'இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்)அதில் நுழையத்தான் போகிறீர்கள்'' என்றனர். நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக்கண்டு உள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?'என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம்,'(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக் கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து) விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார். அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், 'இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)'' என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்'' என்று பதிலளித்தார்கள்.(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறு பாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்து விட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் (என்று கூறினர்).

புஹாரி : 7047 ஸமுரா பின் ஜூன்துப் (ரலி).

Monday, March 24, 2008

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய உறுதிமொழி.

1218. ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாஹித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், 'ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின் படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்'' என்று கூறினார்கள்.

1219. மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், 'ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போர் புரியப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் உடனே புறப்பட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3077 இப்னு அப்பாஸ் (ரலி).

1220. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் பற்றிக் கேட்டதற்கு அவர்கள், 'உமக்கு என்ன கேடு? (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலைமை மிகவும் கடுமையானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிக்கு ஸகாத் கொடுத்து வருகிறீரா?' எனக் கேட்டார்கள். அவர், 'ஆம் என்றதும் நபி (ஸல்) அவர்கள், 'கடல்களுக்குப்பால் சென்று வேலை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய உழைப்பின் ஊதியத்தைக் குறைத்துவிடமாட்டான்'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 1452 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Friday, February 29, 2008

கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுதல்.

1166. நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். 'சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது'' (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.

புஹாரி :2478 இப்னு மஸ்ஊத் (ரலி).

Wednesday, February 20, 2008

சிறையிலுள்ளவரைப் பிணைத்தொகையின்றி விடுவித்தல்.

1152. நபி (ஸல்) அவர்கள் 'நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் 'பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, '(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய். ஸுமாமாவே!'' என்று கேட்டார்கள். அவர், 'நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்'' என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்தபோது அவரிடம், 'ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்'' என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, 'நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், 'ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், 'முஹம்மது, இறைத்தூதர்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்' என்று மொழிந்துவிட்டு, 'முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டார்கள்'' என்று சொல்லிவிட்டு, 'மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், 'நீ மதம் மாறிவிட்டாயா?' என்று கேட்டதற்கு ஸுமாமா (ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (என்னுடைய நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது'' என்று கூறினார்கள்.

புஹாரி :4372 அபூஹூரைரா (ரலி).

Friday, September 14, 2007

மதினாவின் சிறப்புக்கு நபி (ஸல்) அவர்களின் துஆ

863.''இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2129 அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி).

864. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களிடம், 'உங்கள் சிறுவர்களில் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா (ரலி) (தம் வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்துவந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும் போதெல்லாம் 'இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன். நாங்கள் கைபரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வரை நான் அவர்களுக்குச் சேவகம் செய்து கொண்டேயிருந்தேன். ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை (கைபர் போர்ச் செல்வத்தில் தம் பங்காகத்) தேர்ந்தெடுத்துக்கொண்ட பின் அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுக்காக ஓர் 'அங்கியால்' அல்லது 'ஒரு போர்வையால்' தமக்குப் பின்னே திரை அமைத்துப் பிறகு அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக் கொள்வதை பார்த்தேன். நாங்கள் '(சத்துஸ்) ஸஹ்பா' எனும் இடத்தை அடைந்தபோது அவர்கள் 'ஹைஸ்' எனும் பலகாரத்தைத் தயாரித்து ஒரு தோல் விரிப்பில் வைத்தார்கள். பிறகு என்னை அவர்கள் அனுப்பிட நான் (வலீமா விருந்திற்காக) மக்களை அழைத்தேன். அவர்கள் வந்து விருந்து சாப்பிட்டார்கள். அது (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கிய(தற்கு அளித்த வலீமா - மணவிருந்)தாக அமைந்தது. பிறகு அவர்கள் முன்னேறிச் செல்ல அவர்களுக்கு 'உஹத்' மலை தென்பட்டது. அவர்கள், 'இது நம்மை நேசிக்கிற ஒரு மலை. இதை நாமும் நேசிக்கிறோம்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரை நெருங்கிவிட்டபோது 'இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையேயுள்ள அதன் நிலப்பரப்பை நான் புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் 'ஸாஉ' மற்றும் அவர்களின் 'முத்(து)' ஆகிய அளவைகளில் அவர்களுக்கு வளத்தைக் கொடுப்பாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.

புஹாரி :5425 அனஸ் (ரலி).

865. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; இன்ன இடத்திலிருந்து இன்ன இடம் வரை (மதீனா புனிதமானது என்று நபியவர்கள் அறிவித்தார்கள். மேலும், சொன்னார்கள்:) அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக்கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும்'' என்று கூறினார்கள் என பதிலளித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில், 'அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கிறவன் மீது'' என்று வந்துள்ளது.

புஹாரி : 7306 ஆஸிம் (ரலி).

866. ''இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ பரக்கத்தை (அருள் வளத்தை) அளிப்பாயாக! குறிப்பாக அவர்களின் ஸாவு, முத்து ஆகியவற்றில் நீ பரக்கத்தை அளிப்பாயாக!''என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

புஹாரி :2130 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

867. ''இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1885 அனஸ் (ரலி).

868. அலீ (ரலி) அவர்கள் சுட்ட செங்கற்களாலான ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் வாள் ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் ஓர் ஏடு தொங்க விடப்பட்டிருந்தது. அவர்கள் (தம் உரையில்), 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டையும் தவிர ஓதப்படுகிற நூல் எதுவும் எங்களிடம் இல்லை'' என்று கூறிவிட்டு, அதை விரித்துக் காட்டினார்கள். அதில் (உயிரீட்டுத் தொகையாகத் தரப்பட வேண்டிய) ஒட்டகங்களின் வயது விவரங்கள் இருந்தன. மேலும், அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது மதீனா நகரம் 'அய்ர்' எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம் வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாட்டையும் கூடுதலாக வழிபாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான். தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமையின் மீது அல்லாஹ்வின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்.

புஹாரி :7300 அலி (ரலி).

869. மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்க நான் கண்டால், அவற்றை (விரட்டவோ, பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்க மாட்டேன். (ஏனெனில்) 'மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்டவை புனிதமானவை!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1873 அபூஹூரைரா (ரலி).

870. நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! மக்கா நகரை எங்கள் நேசத்திற்குரியதாக நீ ஆக்கியதைப் போன்று மதீனாவையும் எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை 'ஜுஹ்ஃபா' எனும் பகுதிக்கு நீ இடம்பெயரச் செய்திடுவாயாக! இறைவா! (எங்களுடைய அளவைகளான) ஸாஉ, முத்(து) ஆகியவற்றில் (அதாவது எங்கள் உணவில்) எங்களுக்கு நீ செழிப்பை (பரக்கத்) ஏற்படுத்துவாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.

புஹாரி :6372 ஆயிஷா (ரலி).