Showing posts with label சத்தியம். Show all posts
Showing posts with label சத்தியம். Show all posts

Tuesday, July 29, 2008

கனவுகளுக்கு விளக்கமளித்தல்.

1462. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, '(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றீர்கள் . பிறகு இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அவர் மேலே சென்றார்.பின்னர் வேறொருவர் அதன்பின் நான்காவதாக ஒருவர் அக்கயிற்றைப்பற்ற அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது'' என்றார்.அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தைதங்களுக்குஅர்ப்பணம் ஆகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் '(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்'' என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், 'அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும்குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்தி விடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப பின்பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்'' என்று கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்'' என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் '(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)'' என்றார்கள்.

புஹாரி : 7046 இப்னுஅப்பாஸ் (ரலி).

Friday, February 29, 2008

கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுதல்.

1166. நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். 'சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது'' (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.

புஹாரி :2478 இப்னு மஸ்ஊத் (ரலி).

Tuesday, January 29, 2008

குற்றமற்றவர் என நிரூபிக்க பிரதிவாதி சத்தியம் செய்தல்.

1113. இரண்டு பெண்கள் 'ஒரு வீட்டில்' அல்லது 'ஓர் அறையில்' (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்' என்று கூறினார்கள்' எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்பவிலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி (ஸல்) அவர்கள், 'பிரதிவாதி (தன் குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்யவேண்டும்' என்று கூறினார்கள்'' எனக் கூறினார்கள்.

புஹாரி: 4552 இப்னு அபீ முலைக்கா (ரலி).