Showing posts with label தீர்ப்புகள். Show all posts
Showing posts with label தீர்ப்புகள். Show all posts

Wednesday, February 06, 2008

நீதியால் இருவரை ஒருங்கிணைத்தல்.

1122. (பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், 'என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், 'நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், 'உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், 'எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று கூறினார். மற்றொருவர், 'எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது'' என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், 'அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்'' என்று தீர்ப்பளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3472 அபூஹுரைரா (ரலி).

Tuesday, February 05, 2008

மார்க்க அறிஞர்களின் ஆய்வின் முடிவுகளில் வித்தியாசங்கள்.

1121. (தாவூத் - அலை - அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது'' என்று கூற, மற்றொருத்தி அவளிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது'' என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள்.(அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், 'என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்'' என்று கூறினார்கள். அப்போது இளையவள், 'அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்'' என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் 'அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது' என்று தீர்ப்பளித்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3427 அபூஹுரைரா (ரலி).

Sunday, February 03, 2008

கோபத்திலிருக்கும் போது தீர்ப்பளிக்காதே.

1119. (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்கவேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்'' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

புஹாரி :7158 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா (ரலி).

Saturday, February 02, 2008

நீதிபதியின் ஆய்வுசெய்து அளித்த தீர்ப்புக்கு கூலி.

1118. நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7352 அம்ர் பின் அல் ஆஸ் (ரலி).

Friday, February 01, 2008

அளவுக்கதிகமான கேள்விகளைத் தவிர்.

1117. (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2408 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).

Thursday, January 31, 2008

கஞ்சனின் மனைவி கணவனின் பொருளைத் திருடலாம்.

1115. (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5359 ஆயிஷா (ரலி).

1116. ஹிந்த் பின்த் உத்பா, (நபி - ஸல் - அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முழுதும் உள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) பிறகு இன்று பூமியின் முழுதும் உள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (இந்த உன்னுடைய விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)'' என்று பதிலளித்தார்கள். ஹிந்த் பின்த் உத்பா, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியான ஒருவர். எனவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நியாயமான அளவிற்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3825 ஆயிஷா (ரலி).

Wednesday, January 30, 2008

வாதத் திறமையால் வெல்வது பற்றி...

1114. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, 'நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்) விட்டு விடட்டும்'' என்று கூறினார்கள்.

புஹாரி :2458 உம்முஸலமா (ரலி).

Tuesday, January 29, 2008

குற்றமற்றவர் என நிரூபிக்க பிரதிவாதி சத்தியம் செய்தல்.

1113. இரண்டு பெண்கள் 'ஒரு வீட்டில்' அல்லது 'ஓர் அறையில்' (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்' என்று கூறினார்கள்' எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்பவிலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி (ஸல்) அவர்கள், 'பிரதிவாதி (தன் குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்யவேண்டும்' என்று கூறினார்கள்'' எனக் கூறினார்கள்.

புஹாரி: 4552 இப்னு அபீ முலைக்கா (ரலி).