Showing posts with label நிலம். Show all posts
Showing posts with label நிலம். Show all posts

Saturday, August 02, 2008

நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதன் உதாரணம்.

1471. 'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்)புகட்டினர் விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது.அது(ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .

புஹாரி :79 அபூ மூஸா(ரலி) .

1472. என்னுடைய நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளிவீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை (தீயில் விழாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். (ஆனால்,) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவதிலிருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6483 அபூஹூரைரா (ரலி).

Wednesday, February 06, 2008

நீதியால் இருவரை ஒருங்கிணைத்தல்.

1122. (பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், 'என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், 'நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், 'உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், 'எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று கூறினார். மற்றொருவர், 'எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது'' என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், 'அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்'' என்று தீர்ப்பளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3472 அபூஹுரைரா (ரலி).

Thursday, December 13, 2007

அடுத்தவர் நிலத்தை அபகரித்தல்.

1038. 'அர்வா' என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறை வைத்துவிட்டதாகக் கருதி (மதீனாவின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின் போது) நான், 'அவரின் உரிமையில் எதையும் நான் குறைவைப்பேனா?' 'ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு பூமிகளாக மறுமை நாளில் அது (வளையமாக) மாட்டப்படும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்'' என்று சொன்னேன்.

புஹாரி :3198 ஸயீத் பின் ஜைது (ரலி).

1039. எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்'' என்று கூறினார்கள்.

புஹாரி :2453 அபூஸலாமா (ரலி).