Showing posts with label தான தர்மம். Show all posts
Showing posts with label தான தர்மம். Show all posts

Wednesday, February 06, 2008

நீதியால் இருவரை ஒருங்கிணைத்தல்.

1122. (பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், 'என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், 'நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், 'உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், 'எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று கூறினார். மற்றொருவர், 'எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது'' என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், 'அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்'' என்று தீர்ப்பளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3472 அபூஹுரைரா (ரலி).

Wednesday, December 19, 2007

அன்பளிப்பைத் திரும்ப பெறுபவன் நிலை.

1047. தன் அன்பளிப்பைத் திரும்பப்பெறுபவன் வாந்தியெடுத்தப் பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2589 இப்னு அப்பாஸ் (ரலி).

Tuesday, December 18, 2007

அன்பளிப்புச் செய்த பொருளைத் திரும்ப வாங்காதே.

1045. இறைவழியில் சவாரி செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கிவிட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும் எண்ணினேன். எனவே, இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதை வாங்காதீர்! உம்முடைய தர்மத்தை நீர் திரும்பப் பெறாதீர்! அவன் அதை ஒரு திர்ஹத்திற்குத் தந்தாலும் சரியே. ஏனெனில் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன், தான் எடுத்த வாந்தியை உண்பவனைப் போன்றவனாவான்'' என்றார்கள்.

புஹாரி :1490 உமர் (ரலி).

1046. உமர் இப்னு கத்தாப் (ரலி) ஒருவரை இறைவழியில் (போர் புரிய) ஒரு குதிரையின் மீதேற்றி அனுப்பி வைத்தார்கள். பிறகு, அந்தக் குதிரை சந்தையில் விற்கப்படுவதைக் கண்டு அதை வாங்க விரும்பி (அது பற்றி) அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்'' என்று கூறிவிட்டார்கள்.

புஹாரி : 2971 இப்னு உமர் (ரலி).

Sunday, June 10, 2007

தானம் வழங்கியவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்.

651. யாரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இன்னாரின் குடும்பத்திற்கு நீ கிருபை செய்வாயாக!'' என்று பிரார்த்திப்பவராக இருந்தார்கள். என்னுடைய தந்தை (அபூ அவ்ஃபா) தம் ஸகாத்தைக் கொண்டு வந்தார். 'இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினர்க்கு கிருபை செய்வாயாக'' என்று நபி(ஸல்) பிரார்த்தித்தார்கள்.

Saturday, June 02, 2007

தேவையுடையோர்க்கு தானம் செய்தல்.

629.நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களின் தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), 'தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்'' என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

புஹாரி: 3149 அனஸ் (ரலி).

630.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள் ஆனால் என் தந்தை (மக்ரமாவு)க்கு ஒன்றையும் கொடுக்கவில்லை. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என் அன்பு மகனே! என்னுடன் அல்லாஹ்வின் தூதரிடம் வா! என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சென்றேன். என் தந்தை எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு என்று கூற நான் நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீது அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அவர்கள் நான் உங்களுக்காக அதை (யாருக்கும் தராமல்) எடுத்து வைத்திருந்தேன் என்று கூறினார்கள். என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு மக்ரமா திருப்தியடைந்தான் என்று கூறினார்கள்.

புஹாரி: 2599 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).

Sunday, May 27, 2007

யாசிக்காமல் கிட்டியதைப் பெறுதல்.

619.நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)'' என்றார்கள்.

புஹாரி : 1473 உமர் (ரலி).

Saturday, May 26, 2007

யாசகம் தவிர்.

615. 'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என முஆவியா (ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 71 முஆவியா (ரலி).

616. 'ஓரிரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன். மாறாக தன் வாழ்க்கைக்குப் பிறரிடம் கேட்க வெட்கப்படுகிறவனும், அல்லது (அப்படிக் கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழையாவான்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .

புஹாரி : 1476 அபூஹுரைரா (ரலி)

617.''(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1474 இப்னு உமர் (ரலி)

618.''பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2075 அபூஹுரைரா (ரலி).

Friday, May 25, 2007

உயர்ந்த கரம் தாழ்ந்த கரத்தைவிடச் சிறந்தது.

612.நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது'' என்றும் கூறினார்கள்.

புஹாரி : 1429 இப்னு உமர் (ரலி).

613.''உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1428 ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி)

614.நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, 'ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது'' எனக் கூறினார்கள்.அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன். அபூ பக்ர் (ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி), 'முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!' எனக் கூறினார். ஹகீம் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார்.

புஹாரி :1472 ஹகீம் பின் ஹிஸாம் (ரலி).

Thursday, May 24, 2007

இந்நிலையில் தர்மம் செய்வதே சிறந்தது

ஆரோக்கியமாகவும் தேவையுடையவராகவும் இருந்து தானம் செய்தல்.

611.ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1419 அபூஹுரைரா (ரலி).

Wednesday, May 23, 2007

ரகசியமாக தானம் செய்வதின் சிறப்பு.

610.''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 660 அபூஹுரைரா (ரலி)

Tuesday, May 22, 2007

தானப்பொருளை இழிவாகக் கருதாதே.

609.முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி. மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகத்) கொடுத்தாலும் அதைக் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள் இழிவாகக் கருத வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2566 அபூஹுரைரா (ரலி).

Monday, May 21, 2007

கணக்குப் பார்த்து தானம் செய்யாதே.

608.நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேகரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும் என்று கூறினார்கள்.

புஹாரி: 2590 அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி).

Sunday, May 20, 2007

அல்லாஹ்வின் பாதையில்....

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதின் சிறப்பு.

606.''ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'ஸதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!'' என்றார்கள்.

புஹாரி : 1897 அபூஹுரைரா (ரலி).

607.''இறைவழியில் (ஏதேனும் ஒரு பொருளின்) இரண்டு ஜோடிகளைச் செலவிட்டவரை சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், 'இன்னாரே! இங்கே வாரும்' என்று அழைப்பார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூ பக்ர் (ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அவர்களில் நீங்களும் ஒருவர் தாம் என்று நம்புகிறேன்'' என்றார்கள்.

புஹாரி: 2841. அபூஹுரைரா (ரலி).

Saturday, May 19, 2007

மனைவி கணவன் பொருளிலிருந்து....

மனைவி கணவன் பொருளிலிருந்து செய்யும் தர்மம்.

602.''முஸ்லிமான, நம்பிக்கைக்குரிய பாதுகாவலன், தான் ஏவப்பட்ட முறையில் முழுமையாக - நிறைவாக, நல்ல முறையில் மனப்பூர்வமாக, தான் ஏவப்பட்டபடி ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தால் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான்''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1438 அபூ மூஸா (ரலி).

603.''ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை -- வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1425 ஆயிஷா (ரலி).

604.கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரின் அனுமதி இல்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினளார்கள்.

புஹாரி:5192 அபூஹுரைரா (ரலி).

605.ஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தியத்திலிருந்து அவனுடைய உத்தரவின்றி (அறவழியில்) செலவிட்டால், அதன் பிரதிபலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும் என நபி (ஸல்) அவரகள் கூறினார்கள்.

புஹாரி: 5360 அபூஹுரைரா (ரலி)

Friday, May 18, 2007

தானம் செய்தும்....

தானம் செய்தும் உரியவர்க்குச் சேரவில்லையெனில்...

601.''(முன்னொரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம். அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்'' எனக் கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1421 அபூஹுரைரா (ரலி)

Thursday, May 17, 2007

தானம் செய்பவன், கஞ்சனின் உதாரணம்.

600.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும்பாலான நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவர்களின் கைகள் அவர்களின் மார்புபகுதி கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரின் நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரின் பாதச் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ அவனுடைய நீளங்கி அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் மற்றதின் இடத்தைப் பிடித்துவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5797 அபூஹுரைரா (ரலி)

Wednesday, May 16, 2007

தானங்களில் சிறந்தது.

599.பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகிற ஒட்டகம் தான் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அதிகப் பால்தரும் ஆடும் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 2629 அபூஹுரைரா (ரலி)

Tuesday, May 15, 2007

உழைத்து தானம் செய்தல்.

598.தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப் (ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டு வந்தார். இதைக்கண்ட நயவஞ்சகர்கள், '(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டு வந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக்கொண்டு வந்திருக்கிறார்'' என்று (குறை) கூறினார்கள். அப்போதுதான் '(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கிறான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 09:79 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

புஹாரி :4668 அபூமஸ்வூத் (ரலி)

Monday, May 14, 2007

தானத்தால் நரக நெருப்பிலிருந்து..

596.''பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1417 அதீ இப்னு ஹாத்திம் (ரலி)

597.அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காணமாட்டார். பிறகு தம(து முகத்து)க்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்புதான் வரவேற்கும். எனவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6539 அதீ இப்னு ஹாத்திம் (ரலி)

597(1) .(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் 'நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு (நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பிறகு (மீண்டும்) 'நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு, (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு மூன்று முறை (இவ்வாறு) செய்தார்கள். பிறகு 'பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் நரகத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.

புஹாரி :6540 அதீ பின் ஹாத்திம் (ரலி)

Sunday, May 13, 2007

சிறந்த பொருளில் செய்யும் தானம்.

595.நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும் - பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7430 அபூஹுரைரா (ரலி)