Showing posts with label உரிமைகள். Show all posts
Showing posts with label உரிமைகள். Show all posts

Wednesday, June 11, 2008

சாலையில் தடை ஏற்படுத்தாதே.

1374. ''நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2465 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Saturday, February 09, 2008

விருந்தினர்களை உபசரித்தல்.

1126. நபி (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தம் கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்'' என்று கூறினார்கள். அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! அவரின் கொடை என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், '(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.


புஹாரி :6019 அபூஸூரைஹ் அல் அதவி (ரலி).

1127. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும் (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6135 அபூஹுரைஹ் குவைலித் இப்னு அம்ர் (ரலி)

1128. நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், 'தாங்கள் எங்களை ஒரு சமூகத்திடம் அனுப்புகிறீர்கள்; நாங்களும் (தங்கள் கட்டளையை ஏற்று) அங்கு செல்கிறோம்; (ஆனால்,) அவர்கள் எங்களுக்கு விருந்துபசாரம் செய்ய மறுக்கிறார்கள் எனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒரு சமூகத்திடம் சென்று விருந்தினர்களுக்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தனரின் உரிமையை (நீங்களாகவே) எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று எங்களுக்கு பதில் தந்தார்கள்.

புஹாரி : 2461 உக்பா பின் ஆமிர் (ரலி).

Friday, February 08, 2008

கால்நடை உரிமையாளர் அனுமதியின்றி பால்கறக்காதே.

1125. ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரின் சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரின் உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரின் உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின் (கால்நடை உரிமையாளர்களின்) கால் நடைகளுடைய மடிகள் அவர்களின் உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. எனவே, எவரும் ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.


புஹாரி : 2435 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

Thursday, February 07, 2008

காணாமல் போன பொருட்கள்.

1123. ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்து விடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், '(பிறரின்) தொலைந்து போன ஆடு (நம்மிடம் வந்து சேர்ந்தால்...)?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'அது உனக்குச் சொந்தமானது. அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது. அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது'' என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'தொலைந்து போன ஒட்டகம் (நம்மிடம் வந்து சேர்ந்தால்)?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர் பையும் (குடலும்) அதன் கால் குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக் கொள்ளும் வரை. (எனவே, அதன் போக்கில் அதை விட்டுவிடு)'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2372 ஜைது பின் காலித் (ரலி).

1124. நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், 'ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு'' என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிpந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், 'ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு'' என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்கள், 'அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்'' என்று கூறினார்கள். எனவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

புஹாரி :2426 உபை பின் கஃப் (ரலி).

Friday, February 01, 2008

அளவுக்கதிகமான கேள்விகளைத் தவிர்.

1117. (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2408 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).