Showing posts with label தடை. Show all posts
Showing posts with label தடை. Show all posts

Saturday, November 29, 2008

அல்லாஹ் அதிக ரோஷக்காரன்.

1755. ''அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்'' (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா (ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களிடம் 'இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதில் கூறினார்கள்.

புஹாரி :4634 அம்ர் பின் அபூவாயில் (ரலி).

1756. நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறை நம்பிக்கையாளர் செய்வதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5223 அபூ ஹுரைரா (ரலி).

1757. அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5222 அஸ்மா (ரலி) .

Thursday, September 11, 2008

ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1591. நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) - அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! - கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், 'என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)'' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு 'அப்படி எதுவுமில்லை'' என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி), 'அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்று சேராது'' என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) ஃபாத்திமா (ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். - அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், 'ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்'' என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை - (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) - அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். 'அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது'' என்று கூறினார்கள்.

புஹாரி :3110 அலி பின் ஹூஸைன் (ரலி).

1592. அலீ (ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, '(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.

புஹாரி : 3729 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).

1593. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், 'என் மகளே! வருக!'' என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தம் 'வலப்பக்கத்தில்' அல்லது 'இடப் பக்கத்தில்' அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவரின் துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ, இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், 'எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!'' என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், 'உங்களின் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்'' என்றேன். ஃபாத்திமா, 'சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)'' என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார். முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். எனவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்று விடுவேன். எனவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். என்னுடைய பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, 'ஃபாத்திமா! 'இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு' அல்லது 'இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு' தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?' என்று இரகசியமாகக் கேட்டார்கள். (எனவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)

புஹாரி : 6285 ஆயிஷா (ரலி).

Wednesday, August 27, 2008

நபி யூனுஸ் (அலை) அவர்களின் சிறப்பு.

1536. ஒருவர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச்சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3416 அபூஹுரைரா (ரலி).

1537. நான் யூனுஸ் இப்னு மத்தாவை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ('யூனுஸ் இப்னு மத்தா - மத்தாவின் மகன் யூனுஸ்' என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 3413 இப்னு அப்பாஸ் (ரலி).

Saturday, August 23, 2008

முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்.

1521. 'தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7289 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).

1522. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், 'நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்'' என்று குறிப்பிட்டார்கள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், 'என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'இன்னார்'' என்று கூறினார்கள். அப்போதுதான் 'இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி:4621 அனஸ் (ரலி).

1523. நபித்தோழர்கள் (சிலர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, '(நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப் போவதில்லை'' என்றார்கள். அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொரு வரும் தம்தம் ஆடையால் தம் தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள். இந்நிலையில் ஒருவர் தம் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என தாம் அழைக்கப்படுவது குறித்துச் சிலருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?' என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஹுதாஃபா (தாம் உன் தந்தை)'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. எனக்கு சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்த சுவருக்கு அப்பால் கண்டேன்'' என்றார்கள்.

புஹாரி :6362 அனஸ் (ரலி).

1524. 'நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களிடம் அது பற்றி அதிகமாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டபோது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் 'நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்' எனக் கூறினார்கள். அப்போது ஒருவர். 'யார் என்னுடைய தந்தை?' என்று கேட்டதற்குவர்கள் 'ஹுதாபாதான் உம்முடைய தந்தை' என்றார்கள். உடனே வேறொருவர் எழுந்து 'என்னுடைய தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க 'உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம் என்பவர் தாம்' என்றார்கள். (இக் கேள்விகளின் மூலம்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மெய்யாகவே மகத்துவமும், கண்ணியமும் மிக்க இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்' என்றார்கள்''.

புஹாரி : 92 அபூ மூஸா (ரலி).

1525. (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 3589 அபூஹூரைரா (ரலி).

Thursday, August 21, 2008

அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய அண்ணலார்.

1518. நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, 'சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களை விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்'' என்றார்கள்.

புஹாரி :6101 ஆயிஷா (ரலி).

Tuesday, July 22, 2008

பூனைகளைக் கொல்லத் தடை.

1446. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3482 இப்னு உமர்(ரலி) .

Monday, July 21, 2008

எறும்புகளைக் கொல்லத் தடை.

1445. இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே'' என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3019 அபூ ஹுரைரா (ரலி) .

Tuesday, July 01, 2008

மூவரில் இருவர் ரகசியம் பேசுதல் கூடாது.

1409. நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6288 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) .

1410. நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும்வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6290 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

Sunday, June 29, 2008

ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி....

1407. என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், 'இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று கூறினார்கள். இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் 'ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புஹாரி :4324 உம்முஸலமா (ரலி).

Friday, June 20, 2008

பிறர் வீட்டில் துவாரம் வழியாகப் பார்க்காதே.

1393. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது 'என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 6901 ஸஹ்ல் பின் ஸஆது(ரலி).

1394. ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் 'கூர்முனையுடன்' அல்லது 'கூர்முனைகளுடன்' அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரின் கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.

புஹாரி : 6242 அனஸ்(ரலி).

1395. உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6888 அபூஹூரைரா (ரலி).

Wednesday, June 11, 2008

சாலையில் தடை ஏற்படுத்தாதே.

1374. ''நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2465 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Tuesday, June 10, 2008

அரைகுறை தலை மழித்தலுக்குத் தடை.

1373. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

புஹாரி : 5921 இப்னு உமர் (ரலி).

Thursday, June 05, 2008

ஆண்கள் குங்குமப் பூ சாயமிடத் தடை.

1361. ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

புஹாரி : 5846 அனஸ் (ரலி).

Sunday, June 01, 2008

வெள்ளி மோதிரம் அணிய அனுமதி.

1354. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது 'அரீஸ்' எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது.

புஹாரி :5873 இப்னு உமர் (ரலி).


1355. நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, 'நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் ('முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். எனவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கிறேன்.

புஹாரி : 5874 அனஸ் (ரலி).

Saturday, May 31, 2008

தங்க மோதிரம் அணியத் தடை.

1352. நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரத்தை அணியவேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடைவிதித்தார்கள்.


புஹாரி : 5864 அபூஹூரைரா (ரலி).

1353. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழறறிவிட்டு, 'நான் இந்த மோதிரத்தை உள்ளங்கைப் பக்கமாக அதன் குமிழ் அமையும்படி அணிந்து கொண்டிருந்தேன்'' என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள். பிறகு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்'' என்று கூறினார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை(க் கழற்றி) எறிந்தனர்.


புஹாரி :6651 இப்னு உமர் (ரலி).

Wednesday, April 30, 2008

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.

1301. 'போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 242 ஆயிஷா (ரலி).

1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, '(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)'' என்று (அறிவுரை) கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான 'பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4344 அபூபுர்தா (ரலி).

Monday, April 28, 2008

கனிகளை போதை பெற ஊறவைக்கத் தடை.

1294. நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம் பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சக் செங்காய்களையும் கலந்து ஊற வைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.

புஹாரி : 5601 ஜாபிர் (ரலி).

1295. நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும், பேரீச்சம் பழத்தையும் உலர்ந்த திரட்சையையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித் தனியாக ஊற வைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்).

புஹாரி : 5602 அபூகதாதா (ரலி).

Sunday, April 27, 2008

போதை தரும் பானங்கள் பற்றி...

குடி பானங்கள்

1292. பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து 'இத்கிர்' புல்லைக் கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும் தீனிப் பைகள், மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களும் அன்சாரி ஒருவரின் அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது திரும்பி வந்தேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் இந்த (அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்த விடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், 'இதையெல்லாம் செய்தவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில் தான் இருக்கிறார்'' என்று பதிலளித்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களிடம் ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களின் செயலால் நான் அடைந்த வேதனை என் முகத்தில் தென்பட, அதைப் புரிந்து கொண்டார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கரமான) ஒரு நாளை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. ஹம்ஸா என் இரண்டு ஒட்டகங்களையும் தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) கிழித்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் நண்பர்கள் குழுவுடன் இருக்கிறார்'' என்று சொன்னேன். உடனே, நபி (ஸல்) அவர்கள் தங்களின் அங்கி ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி அதையணிந்து நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் இப்னு ஹாரிஸாவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபிக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்கே அவர்கள் (அனைவரும்) மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரண்டு கண்களும் சிவந்திருக்க, அவர் போதையுற்று விட்டிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதரைப் பார்த்துப் பார்வையை உயர்த்தி அவர்களின் இரண்டு முழங்கால்களையும் பார்த்தார்; பிறகு பார்வையை உயர்த்தி, அவர்களின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு, 'நீங்கள் என் தந்தையின் அடிமைகள் தாமே?' என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, தாம் வந்த வழியே (திரும்பாமல்) அப்படியே பின் வாங்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.

புஹாரி : 3091 அலீ (ரலி).

1293. நான் அபூ தல்ஹா (ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, '(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது'' என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) என்னிடம், 'வெளியே சென்று இதை ஊற்றிவிடு'' என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், 'மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)'' என்று கேட்டார்கள். அப்போதுதான், 'இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்களின் மீது குற்றமில்லை'' (திருக்குர்ஆன் 05:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

புஹாரி : 2464 அனஸ் (ரலி).

Friday, April 18, 2008

உடும்புக் கறி உண்ணலாம்.

1271. உடும்பை நான் உண்ணவும் மாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவும் மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5536 இப்னு உமர் (ரலி).

1272. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர், அது உடும்பு இறைச்சி என்று அவர்களை அழைத்துச் சொன்னார்கள். உடனே அவர்கள் (அதை உண்ணுவதை) நிறுத்திவிட்டார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'சாப்பிடுங்கள்' அல்லது 'உண்ணுங்கள்'. ஏனெனில், அது, 'அனுமதிக்கப்பட்டதாகும்' அல்லது, 'அதனால் குற்றமில்லை'என்று கூறினார்கள். ஆயினும், அது என் (பரிச்சியமான) உணவு அல்ல'' என்றார்கள்.

புஹாரி : 7267 இப்னு உமர் (ரலி).

1273. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ் (ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா (ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் 'நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் 'உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை'' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

புஹாரி : 5391 காலித் பின் வலீத் (ரலி).

1274. என் தாயரின் சகோதரியான உம்மு ஹூஃபைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டியையும் வெண்ணெயையும் உடும்புகளையும் அன்பளிப்பாகத் தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலிருந்தும், வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால் அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றியதால் உடும்புகளை உண்ணாமல் விட்டு விட்டார்கள். (எனினும்) அது (உடும்பு) அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டிருக்காது.

புஹாரி :2575 இப்னு அப்பாஸ் (ரலி).

Thursday, April 17, 2008

குதிரை இறைச்சி உண்ணலாம்.

1269. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள்.

புஹாரி :4219 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1270. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து ('நஹ்ர்' செய்து) அதை உண்டோம்.

புஹாரி : 5510 அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி).