Showing posts with label கண். Show all posts
Showing posts with label கண். Show all posts

Tuesday, January 06, 2009

தஜ்ஜால் பற்றிய விவரங்கள்.

1854. நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால்' என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, 'அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், 'தஜ்ஜால்' என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3439 இப்னு உமர் (ரலி).

1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே 'காஃபிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7131 அனஸ் (ரலி).

1856. உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), 'தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை 'இது நெருப்பு' என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை 'இது குளிர்ந்த நீர்' என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3450 ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).

1857. நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).

Tuesday, November 04, 2008

விபச்சாரத்தில் ஆதமின் மகனின் பங்கு.

1701. விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6243 அபூஹுரைரா (ரலி).

Friday, June 20, 2008

பிறர் வீட்டில் துவாரம் வழியாகப் பார்க்காதே.

1393. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது 'என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 6901 ஸஹ்ல் பின் ஸஆது(ரலி).

1394. ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் 'கூர்முனையுடன்' அல்லது 'கூர்முனைகளுடன்' அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரின் கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.

புஹாரி : 6242 அனஸ்(ரலி).

1395. உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6888 அபூஹூரைரா (ரலி).

Sunday, June 08, 2008

கண் திருஷ்டிக்கு ஒட்டகக் கழுத்தில் எதையும் கட்டாதே.

1371. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, 'எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்'' என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ர் (ரஹ்), 'அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள்' என்று அபூ பஷீர் (ரலி) கூறினார் என எண்ணுகிறேன்'' என்று கூறுகிறார்கள்.

புஹாரி : 3005 அபூபஷீர் அல் அன்ஸாரி (ரலி).

Saturday, May 17, 2008

கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.

1328. சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4478 ஸயீத் இப்னு ஸைத் (ரலி).

Monday, April 21, 2008

வேட்டையாட சிறு கற்களைப் பயன்படுத்தாதே.

1277. நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், 'சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது 'சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் 'அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது .எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று கூறினார்கள்' எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது 'சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்'' என்று சொன்னேன்.

புஹாரி :5479 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி).