Showing posts with label தண்ணீர். Show all posts
Showing posts with label தண்ணீர். Show all posts

Thursday, January 15, 2009

இறை வேதனைக்கு பயப்படுதல்

1876. ''இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த (ஸமூத் கூட்டத்தினரின்) இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம்! நீங்கள் அழுதவர்களாக இல்லையென்றால் அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள்! அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 433 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1877. மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான 'ஹிஜ்ர்' என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டி விடும்படியும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் - அலை- அவர்களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்தோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் உத்திரவிட்டார்கள்.

புஹாரி : 3379 இப்னு உமர் (ரலி).

Wednesday, January 14, 2009

நபி (ஸல்), அவர்களின் குடும்பத்தாரின் உணவு!

1869. இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற் புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் புனிதப் போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப் போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா வாசிகளான) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால் நான் (இதுவரை) செய்து வந்த வழிபாடு வீணாகி நான் இழப்புக்குள்ளாகி விட்டேன் (போலும் என வருந்தினேன்).

புஹாரி : 6453 ஸஆது பின் அபீவக்காஸ் (ரலி).

1870. ''அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

புஹாரி : 6460 அபூஹூரைரா (ரலி).

1871. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

புஹாரி : 5416 ஆயிஷா (ரலி).

1872. முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நாளில் இரண்டு முறை உணவு உண்டால் அதில் ஒன்று (வெறும்) பேரீச்சம் பழமாகவே இருக்கும்.

புஹாரி : 6455 ஆயிஷா (ரலி).

1873. என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம் பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம் அப்படியிருந்தும் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான் என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்? ஏன்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றொன்று ) தண்ணீர். தவிர அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்தவதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.

புஹாரி : 2567 உர்வா (ரலி).

1874. இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

புஹாரி : 5374 ஆயிஷா (ரலி).

1875. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.

புஹாரி : 5383 அபூஹூரைரா (ரலி).

Thursday, January 08, 2009

இரு ஸூருக்கும் இடைப்பட்ட காலம்.

1864. ''(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறினார். (அபூஹுரைரா (ரலி) அவர்களின் நண்பர்கள்,) '(அபூஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?' என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி), '(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்'' என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், 'நாற்பது மாதங்களா?' என்று கேட்டனர். அதற்கும் 'நான் விலகிக் கொள்கிறேன்'' என அபூஹுரைரா (ரலி) கூறினார். 'ஆண்டுகள் நாற்பதா?' என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி), 'நான் விலகிக் கொள்கிறேன்'' என்று கூறினார்கள். பின்னர், 'வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள் வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்'' என்று மேலும் கூறினார்கள்.

புஹாரி : 4935 அல் அமாஷ் (ரலி).

Tuesday, January 06, 2009

தஜ்ஜால் பற்றிய விவரங்கள்.

1854. நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால்' என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, 'அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், 'தஜ்ஜால்' என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3439 இப்னு உமர் (ரலி).

1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே 'காஃபிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7131 அனஸ் (ரலி).

1856. உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), 'தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை 'இது நெருப்பு' என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை 'இது குளிர்ந்த நீர்' என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3450 ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).

1857. நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).

Sunday, October 26, 2008

தமக்குத் துன்பம் தராத விலங்குகளைத் துன்புறுத்துதல்.

1683. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை. அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை. அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3482 இப்னு உமர் (ரலி).

Monday, September 22, 2008

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1610. 'நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் 'இந்தத் தண்ணீரை யார் வைத்தது?' என்று கேட்டதற்கு (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே 'இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக' என்று பிரார்த்தித்தார்கள்''.

புஹாரி: 143 இப்னுஅப்பாஸ்(ரலி).

Monday, August 04, 2008

ஹவ்ளுல் கவ்ஸர் பற்றி....

1475. நான் உங்களுக்கு முன்பே ('அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6589 ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி).

1476. நான் உங்களுக்கு முன்பே 'அல்கவ்ஸர்' தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வர முடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். (அதை) அருந்துகிறவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்து கொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6583 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி).

1477. (நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்கள் 'இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்'' '(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்''என்று நான் கூறுவேன். அதற்கு 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று சொல்லப்படும். உடனே நான் 'எனக்குப் பின்னால்(தம் மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!'' என்று (இரண்டு முறை) கூறுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6584 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

1478. ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6579 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) .

1479. நான் ('அல்கவ்ஸர்') தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்'' என்பேன். அதற்கு 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6593 அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி).

1480. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடம் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் மேடை மீது ஏறி, 'நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன். நிச்சயமாக! (என்னுடைய மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொவருர் (போட்டியிட்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி :4042 உக்பா பின் ஆமிர் (ரலி).

1481. ''நான் உங்களுக்கு முன்பே ('அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!'' என்பேன். அப்போது 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது' எனக் கூறப்படும்.

புஹாரி :6575-6576 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

1482. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ('அல்கவ்ஸர்') எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது '(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) 'ஸன்ஆ' நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 6591 ஹாரிதா பின் வஹப் (ரலி).

1483. '' ('அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) 'ஸன்ஆ'விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம் 'அதன் கோப்பைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று வினவினார்கள். நான் 'இல்லை' என்றேன். அதற்கு அவர்கள் '(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்'' என (நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாக)ச் சொன்னார்கள்.

புஹாரி : 6592 ஹாரிதா பின் வஹப் (ரலி).

1484. (மறுமை நாளில் என்னுடைய 'அல்கவ்ஸர்' எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) 'ஜர்பா' மற்றும் 'அத்ருஹ்' ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6577 இப்னு உமர்(ரலி) .

1485. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! (தன்னுடைய குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2367 அபூஹூரைரா (ரலி).

1486. என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள 'ஸன்ஆ' நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) 'அய்லா' நகரத்திற்கும் இடையேயான (தொலை தூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிடலங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6580 அனஸ்(ரலி).

1487. (மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும்போது என்னைவிட்டுஅவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!'' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :அனஸ்(ரலி).

Thursday, July 31, 2008

நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்.

நபிமார்கள் சிறப்புகள்

1468. 'அஸர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். மக்கள் உளூச் செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையை வைத்து அப்பாத்திரத்திலிருந்து உளூச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் விரல்களின் கீழேயிருந்தது அங்கிருந்த கடைசி நபர் உளூச் செய்து முடிக்கும் வரை தண்ணீர் சுரந்து கொண்டிருந்ததை பார்த்தேன்'' என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

புஹாரி :169 அனஸ்(ரலி).

1469. நாங்கள் தபூக் யுத்தத்தின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்று கொண்டிருந்தோம். வாதில்குரா எனும் இடத்தை அடைந்தபோது ஒரு பெண் தன் தோட்டத்தில்இருந்ததைக் கண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழாகளை நோக்கி (இத்தோட்டத்தில்) எவ்வளவு பழங்கள் தேறும்? கணித்துக் கூறுங்கள்' எனக் கேட்டுவிட்டு பத்து வஸக் அளவு (தேறும்) எனக் கணித்தார்கள். பின்பு அப்பெண்ணிடம் 'இதில் கிடைப்பதைக் கணக்கிட்டுவை' எனக் கூறினார்கள். நாங்கள் தபூக்கை அடைந்தபோது 'இன்றிரவு கடும் காற்று அடிக்கும்; எனவே, யாரும் வெளியில் செல்ல வேண்டாம். ஒட்டகமுடையவர்கள் அதை நன்கு கட்டி வைக்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நாங்களும் ஒட்டகங்களைக் கட்டிப்போட்டு விட்டோம். கடும் காற்றும் வீசத்தொடங்கிற்று. நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறியவராக ஒருவர் வெளியே எழுந்துவந்தார். உடனே காற்று அவரை தய்யி என்ற மலையில் கொண்டு போய்ப் போட்டது. வழியில், அய்லா என்ற ஊரின் மன்னன் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் போர்த்தினார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்றும் எழுதிக் கொடுத்தார். (போரிலிருந்து) திரும்பி, 'வாதில் குராவை' அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம் 'உன்னுடைய தோட்டத்தில் எவ்வளவு தேறியது?' எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கணித்த பத்து வஸக் தான்' என்று கூறினார். பின்பு நபி (ஸல்) அவர்கள் 'நான் விரைவாக மதீனா செல்ல வேண்டும். எனவே, உங்களில் யாரேனும் என்னோடு விரைவாக மதீனா வர நாடினால் உடனே புறப்படுங்கள்'' என்றார்கள். மதீனா நெருங்கியபோது, 'இது நறுமணம் கமழும் நகரம்'' என்றார்கள். பின்பு உஹது மலையைப் பார்த்தபோது 'இது அழகிய சிறிய மலை இது நம்மை நேசிக்கிறது நாம் அதை நேசிக்கிறோம்'' என்று கூறிவிட்டு, 'அன்ஸாரிகளில் சிறந்த குடும்பத்தினரை நான் அறிவிக்கட்டுமா?' எனக் கேட்க தோழர்களும், 'ஆம்' என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'பனூ நஜ்ஜார், குடும்பத்தினர், பின்பு பனூ அப்துல் அஷ்ஹல், பிறகு பனூ ஸாயிதா அல்லது பனூஹாரிஸ் இன்னும் அன்ஸாரிகளின் அனைத்துக் குடும்பத்தினரும் சிறந்தவர்களே'' என்றார்கள். மற்றோர் அறிவிப்பில் 'பனூ ஹாரிஸா பின்பு பனூ ஸாயிதா' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது. மற்றோர் அறிவிப்பில் 'உஹத் மலை நம்மை நேசிக்கிறது அதை நாம் நேசிக்கிறோம்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.''அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனூஹாரிஸ், பிறகு பனூ சாஇதா குடும்பங்கள் ஆகும். அன்சாரிக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி) எங்களிடம் வந்து சேர்ந்தார். அப்போது (அவரிடம்) அபூ உஸைத்(ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு (அப்படிக் குறிப்பிட்டவர்களில்) நம்மைக் கடைசியானவர்களாகக் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) உடனே ஸஅத் இப்னு உபாதா (ரலி) நபி (ஸல்) அவர்களை அடைந்து, 'இறைத்தூதர் அவர்களே! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்கள் (தங்களால்) சிறப்பித்துக் கூறப்பட்டபோது (அன்சாரிகளில் ஒரு குடும்பத்தினரான) நாங்கள் கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளோமே (ஏன்?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் மிகச் சிறந்(குடும்பத்)தவர்களில் இடம் பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?' என்று கூறினார்கள்.

புஹாரி : 1481 3791 அபூஹூமைத்(ரலி).

Wednesday, July 23, 2008

விலங்குகளுக்கு நீர் புகட்டுதல்.

1447. ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2363 அபூஹூரைரா (ரலி).

1448. (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3467 அபூ ஹுரைரா(ரலி) .

Friday, July 11, 2008

ஆண்குழந்தை ஆடையில் சிறுநீர் கழித்தால்....

1428. '(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை'' .

புஹாரி : 223 உம்மு கைஸ் (ரலி).

Wednesday, July 09, 2008

இரத்தம் குத்தி எடுத்தல்,தேன் அருந்துதல்,சூடிட்டுக் கொள்தல், நோய் நிவாரணி.

1421. உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் 'இருப்பதாயிருந்தால்' அல்லது 'இருக்கிறதென்றால்' நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5683 ஜாபிர் (ரலி).

1422. ''நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, எடுத்தார்கள்; இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்தார்கள்!''

புஹாரி : 2278 இப்னு அப்பாஸ் (ரலி).

1423. ''நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்; எவருடைய கூலியிலும் நபி (ஸல்), அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்!''

புஹாரி : 2280 அனஸ் (ரலி).

1424. காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3264 இப்னு உமர் (ரலி) .

1425. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டு வரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்பகுதியில் தெளிப்பார்கள். மேலும், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலைத் தண்ணீரால் தணிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டுவந்தார்கள்'' என்றும் கூறினார்கள்.

புஹாரி :5724 ஃபாத்திமா பின்த் அல் முன்திர் (ரலி).

1426. காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5726 ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி).

Friday, May 09, 2008

சபையில் வலப்புறம் பேணுதல்.

1318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்தோம். பிறகு நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். நபி (ஸல்)அவர்கள் பாலைக் குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்திலிருப்பவர்களே முன்னுரிமையுடையவர்கள். ஆகவே வலப்ப்பத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள் அது நபிவழியாகும் அது நபிவழியாகும் என்று மும்முறை கூறினார்கள்

புஹாரி : 2571 அனஸ் (ரலி).

1319. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), 'சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.

புஹாரி : 2351 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

Thursday, May 08, 2008

குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடாதே.

1316. (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி:154 அபூகதாதா (ரலி).

1317. (என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள்.

புஹாரி :5631 துமாமா பின் அப்துல்லாஹ் (ரலி).

Wednesday, May 07, 2008

நின்று கொண்டு குடித்தல்.

1315. நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள்.

புஹாரி : 1637 இப்னு அப்பாஸ் (ரலி).

Tuesday, May 06, 2008

உண்ணும் பருகும் முறையில் பேணுதல்.

1313. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!'' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

புஹாரி : உமர் பின் அபீஸலமா (ரலி).

1314. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை 'இக்தினாஸ்' செய்ய வேண்டாமெனத் தடை விதிப்பதை கேட்டுள்ளேன். ('இக்தினாஸ்' என்றால், தோல் பைகளின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து பருகுவதாகும்'')

புஹாரி : 5626 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).