Showing posts with label கிராமவாசி. Show all posts
Showing posts with label கிராமவாசி. Show all posts

Friday, August 01, 2008

அல்லாஹ்வின் மீதே தவக்குல் வைத்தல்.

1470. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், 'என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?' என்று கேட்டார். நான், 'அல்லாஹ்' என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்' என்று கூறினார்கள். பிறகு அவரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை (மன்னித்து விட்டு விட்டார்கள்.)

புஹாரி : 4135 ஜாபிர் (ரலி).

Friday, May 09, 2008

சபையில் வலப்புறம் பேணுதல்.

1318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்தோம். பிறகு நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். நபி (ஸல்)அவர்கள் பாலைக் குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்திலிருப்பவர்களே முன்னுரிமையுடையவர்கள். ஆகவே வலப்ப்பத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள் அது நபிவழியாகும் அது நபிவழியாகும் என்று மும்முறை கூறினார்கள்

புஹாரி : 2571 அனஸ் (ரலி).

1319. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), 'சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.

புஹாரி : 2351 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).