Showing posts with label இரத்தம். Show all posts
Showing posts with label இரத்தம். Show all posts

Wednesday, July 09, 2008

இரத்தம் குத்தி எடுத்தல்,தேன் அருந்துதல்,சூடிட்டுக் கொள்தல், நோய் நிவாரணி.

1421. உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் 'இருப்பதாயிருந்தால்' அல்லது 'இருக்கிறதென்றால்' நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5683 ஜாபிர் (ரலி).

1422. ''நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, எடுத்தார்கள்; இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்தார்கள்!''

புஹாரி : 2278 இப்னு அப்பாஸ் (ரலி).

1423. ''நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்; எவருடைய கூலியிலும் நபி (ஸல்), அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்!''

புஹாரி : 2280 அனஸ் (ரலி).

1424. காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3264 இப்னு உமர் (ரலி) .

1425. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டு வரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்பகுதியில் தெளிப்பார்கள். மேலும், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலைத் தண்ணீரால் தணிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டுவந்தார்கள்'' என்றும் கூறினார்கள்.

புஹாரி :5724 ஃபாத்திமா பின்த் அல் முன்திர் (ரலி).

1426. காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5726 ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி).

Friday, April 25, 2008

பலிப்பிராணியை பல் நகங்களால் அறுக்காதே.

1285. நான் (துல் ஹுலைஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது) 'இறைத்தூதர் அவர்களே! (நம்மிடம் உள்ள கத்திகளால் ஒட்டகங்களை இன்று அறுத்துவிட்டால் அவற்றின் முனை மழுங்கி) நம்மிடம் கத்திகளே இல்லாத நிலையில் நாளை நாம் எதிரியைச் சந்திக்க நேருமே!'' என்று சொன்னேன். அப்போது அவர்கள், 'விரைவாக' அல்லது 'தாமதமின்றி' (எதைக் கொண்டாவது அறுத்திடுங்கள்) இரத்தத்தை சிந்தச் செய்யும் (ஆயுதம்) எதுவாயினும் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர! அவற்றைக் குறித்து உங்களுக்கு இதோ கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும்'' என்று கூறினார்கள்.(அப்போது) நாங்கள் போர்ச் செல்வமாக ஒட்டகத்தையும் ஆட்டையும் பெற்றோம். அவற்றிலிருந்து ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதன் மீது ஒருவர் ஓர் அம்பை எய்து அதை (ஓடவிடாமல்) அவர் தடுத்து (நிறுத்தி)விட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை சில இருப்பதைப் போன்றே இந்த ஒட்டகங்களிலும் கட்டுக் கடங்காதவை உண்டு. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5509 ரஃபீ பின் கதீஜ் (ரலி).

1286. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப், பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி) விட்டனர். நபி (ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்தவுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும் படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்தவை வெளியே கொட்டப்பட்டு) விட்டன. பிறகு, அவற்றை அவர்கள் பங்கிட்டார்கள். பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள். அப்போது ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. ஒருவர் (நபித் தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எறிந்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்தி விட்டான். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பது போல் இந்தப் பிராணிகளிலும் கட்டுக் கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே செய்யுங்கள் (அம்பெறிந்து தடுத்து நிறுத்துங்கள்)'' என்று கூறினார்கள். நான், '(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் பகைவர்களை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (இந்த ஒட்டகத்தை) அறுக்கலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), அவர்கள், 'இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர, அதைப் பற்றி ('அது ஏன் கூடாது' என்று) நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2488 ரஃபீபின் கதீஜ் (ரலி).

Sunday, March 02, 2008

உஹதுப்போர்.

1169. உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களின் நடுப் பல் உடைக்கப்பட்டுவிட்டபோது, அலீ (ரலி) (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் அவ்வப்போது தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா (ரலி) காயத்தைக் கழுவி வந்தார்கள். இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி), ஒரு பாயை எடுத்து அதை எரித்து, (அதன் சாம்பலை) நபி (ஸல்) அவர்களின் காயத்தின் மேல் வைத்து அழுத்தி விட, இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.

புஹாரி : 2903 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

1170. (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. 'அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, 'இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3477 இப்னு மஸ்ஊத் (ரலி).

Monday, February 18, 2008

போரில் கொல்லப்பட்டவனின் உடமை கொன்றவனைச் சாரும்.

1144. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்.) நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து அவரைக் கொல்ல முயன்றான். நான் சென்று அவனைச் வாளால் அவனுடைய (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டினேன். உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்தான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்கலானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டுவிட்டான். உடனே நான் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்து, 'மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(இது) அல்லாஹ் விதித்த விதி'' என்று பதிலளித்தார்கள்.

பிறகு, மக்கள் (அப்பாஸ் (ரலி) அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து, 'போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை'' என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, 'எனக்கு சாட்சி சொல்வார் யார்?' என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், 'போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை'' என்று கூறினார்கள். உடனே, நான் எழுந்து நின்று, 'எனக்கு சாட்சி சொல்வார் யார்?' என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு, மூன்றவாது முறையாக அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே, நான் எழுந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அபூ கதாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள்.

நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஒருவர், 'இவர் உண்மையே சொன்னார், இறைத்தூதர் அவர்களே! இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவரை (ஏதாவது கொடுத்துத்) திருப்திப்படுத்தி விடுங்கள்'' என்றார். அப்போது அபூ பக்ர் சித்திக் (ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்'' என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், '(அபூ பக்ர்) உண்மை சொன்னார்'' என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ ஸலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் சேகரித்த முதல் சொத்தாகும்.

புஹாரி :3142 அபூகதாதா (ரலி).

1145. பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இள வயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, 'அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, 'என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?' என்று கேட்டார். நான், 'ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!'' என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், 'அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)'' என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, 'இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!'' என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் யார் அவனைக் கொன்றது?' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், 'நானே (அவனைக் கொன்றேன்)'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், 'உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?' என்று கேட்டார்கள். இருவரும், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, 'நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) 'அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை'' .அவர்கள் இருவர் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹ் (ரலி) முஆத் இப்னு அஃப்ரா (ரலி) அவர்களும் ஆவர்.

புஹாரி :3141 அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி).