Showing posts with label ஆயுதங்கள். Show all posts
Showing posts with label ஆயுதங்கள். Show all posts

Friday, April 25, 2008

பலிப்பிராணியை பல் நகங்களால் அறுக்காதே.

1285. நான் (துல் ஹுலைஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது) 'இறைத்தூதர் அவர்களே! (நம்மிடம் உள்ள கத்திகளால் ஒட்டகங்களை இன்று அறுத்துவிட்டால் அவற்றின் முனை மழுங்கி) நம்மிடம் கத்திகளே இல்லாத நிலையில் நாளை நாம் எதிரியைச் சந்திக்க நேருமே!'' என்று சொன்னேன். அப்போது அவர்கள், 'விரைவாக' அல்லது 'தாமதமின்றி' (எதைக் கொண்டாவது அறுத்திடுங்கள்) இரத்தத்தை சிந்தச் செய்யும் (ஆயுதம்) எதுவாயினும் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர! அவற்றைக் குறித்து உங்களுக்கு இதோ கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும்'' என்று கூறினார்கள்.(அப்போது) நாங்கள் போர்ச் செல்வமாக ஒட்டகத்தையும் ஆட்டையும் பெற்றோம். அவற்றிலிருந்து ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதன் மீது ஒருவர் ஓர் அம்பை எய்து அதை (ஓடவிடாமல்) அவர் தடுத்து (நிறுத்தி)விட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை சில இருப்பதைப் போன்றே இந்த ஒட்டகங்களிலும் கட்டுக் கடங்காதவை உண்டு. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5509 ரஃபீ பின் கதீஜ் (ரலி).

1286. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப், பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி) விட்டனர். நபி (ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்தவுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும் படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்தவை வெளியே கொட்டப்பட்டு) விட்டன. பிறகு, அவற்றை அவர்கள் பங்கிட்டார்கள். பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள். அப்போது ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. ஒருவர் (நபித் தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எறிந்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்தி விட்டான். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பது போல் இந்தப் பிராணிகளிலும் கட்டுக் கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே செய்யுங்கள் (அம்பெறிந்து தடுத்து நிறுத்துங்கள்)'' என்று கூறினார்கள். நான், '(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் பகைவர்களை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (இந்த ஒட்டகத்தை) அறுக்கலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), அவர்கள், 'இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர, அதைப் பற்றி ('அது ஏன் கூடாது' என்று) நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2488 ரஃபீபின் கதீஜ் (ரலி).

Friday, February 22, 2008

உடன்படிக்கையை மீறுவோர் மீது....

1155. (யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். ஸஅத் (ரலி) அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்'' என்று (மக்களிடம்) கூறினார்கள். ஸஅத் (ரலி) வந்து அல்லாஹ்வின் தூதருக்கு அருகே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். ஸஅத் (ரலி), 'அப்படியென்றால் நான் அவர்களிடையேயுள்ள போரிடும் வலிமையுள்ளவர்களைக் கொன்று விட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கிறேன்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்களின் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி :3043 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1156. அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத் (ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு 'எங்கே? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது 'பனூ குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள். (பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தீர்ப்பை ஸஅத் இப்னு முஆத் (ரலி), 'பனூ குறைழாக்களில் போர் புரியும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்படவேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி: 4122 ஆயிஷா (ரலி).

1157. (காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தபோது) ஸஅத் (ரலி), 'இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர் புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் என்னுடைய காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்து விடு'' என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரின் நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களின் கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த 'பனூ ஃம்பார்' குலத்தாருக்கு ஸஅத் அவர்களின் கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள், 'கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழிய 'ஸஅத்' (ரலி) இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே ஸஅத் (ரலி) இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக!.

புஹாரி 4122 ஆயிஷா (ரலி).