Showing posts with label யூதர்கள். Show all posts
Showing posts with label யூதர்கள். Show all posts

Sunday, December 07, 2008

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.

1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப்பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து,'அபுல்காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப் படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்''.

புஹாரி : 125 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

1781. நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தரமாட்டேன்!''என்றான். நான் 'அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!' எனக் கூறினேன். அதற்கவன் 'நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!'' என்றான். அப்போதுதான் 'நம்முடைய வசனங்களை நிராகரித்து, '(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!' என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) கருணையாளனான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?' என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!''.

புஹாரி :2091 கப்பாப் (ரலி).

Saturday, December 06, 2008

சுவன வாசிகள் பெறும் மகிழ்ச்சி.

1778. நபி (ஸல்) அவர்கள் 'மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு 'உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு 'பாலாம்' மற்றும் 'நூன்' என்றார். மக்கள் 'இது என்ன?' என்று கேட்டார்கள். அந்த யூதர் '(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்'' என்று கூறினார்.

புஹாரி : 6520 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1779. யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3941 அபூஹுரைரா (ரலி).

Friday, November 07, 2008

யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றுதல்.

1708. ''உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?' என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'வேறு யாரை?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

புஹாரி :7320 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Wednesday, November 05, 2008

குழந்தைகள் இயற்கை மார்க்கத்தில் பிறக்கின்றன.

1702. ''ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.''பிறகு அபூ ஹுரைரா(ரலி), எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தை ஓதிக்காட்டினார்.

புஹாரி : 1359 அபூஹூரைரா (ரலி).

1703. இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்'' எனக் கூறினார்கள்.

புஹாரி :1384 அபூஹூரைரா (ரலி).

1704. இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் 'அவர்களைப் படைத்த அல்லாஹ், அவர்கள் (உயிருடனிருந்திருந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிந்தவன்'' எனக் கூறினார்கள்.

புஹாரி :1383 இப்னுஅப்பாஸ் (ரலி).

Tuesday, August 26, 2008

நபி மூஸா (அலை) அவர்களின் சிறப்புகள்.

1532. 'இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை' என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து 'கல்லே! என்னுடைய ஆடை!' என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை' என்று கூறினார்கள். மூஸா (அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.''அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்'' என அபூஹுரைரா (ரலி) கூறினார்.

புஹாரி : 278 அபூஹுரைரா (ரலி).

1533. உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா (ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா (அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், 'இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்' என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, 'நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையைவைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்'' என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா (அலை) 'இறைவா! அதற்குப் பிறகு?' எனக் கேட்டதும் அல்லாஹ், 'பிறகு மரணம் தான்' என்றான். உடனே மூஸா (அலை) அவர்கள் 'அப்படியானால் இப்பொழுதே (தயார்)' எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும் புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, 'நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா (அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்'' எனக் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 1339 அபூஹூரைரா (ரலி).

1534. ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி (ஸல்) அவர்கள், 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா (அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2411 அபூஹூரைரா (ரலி).

1535. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, 'அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், '(அந்தத் தோழர்) யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அன்சாரிகளில் ஒருவர்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்'' என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், 'இவரை நீர் அடித்தீரா?' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, 'இவர் கடைவீதியில், 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், 'தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். 'மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2412 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Monday, June 23, 2008

வேதக்காரர்களின் ஸலாமுக்கு எப்படி பதிலுரைப்பது?

1398. வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6258 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1399. யூதர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் அவர்களில் சிலர் 'அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதிலாக) 'வ அலைக்க' (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6257 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1400. யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர். 'வ அலைக்கு முஸ்ஸாமு வல்லஅனா'' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்றார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?' என்று கேட்டேன் அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நான் ('அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து) 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என பதிலளித்து விட்டேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி :6256 ஆயிஷா (ரலி).

Thursday, June 19, 2008

பிறர் வீட்டில் நுழைய அனுமதி முறையாகக் கேட்டல்.

1392. என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள்.அதற்கு நான், 'நான்தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'நான் நான் என்றால்...?' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.

புஹாரி : 6250 ஜாபிர் (ரலி).

Friday, June 06, 2008

யூத கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்தல்.

1362. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3462 அபூஹுரைரா (ரலி).

Sunday, March 16, 2008

ஆட்சி அதிகாரத்தை கேட்டுப் பெறாதே.

1197. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து'' என்றார்கள்.

புஹாரி : 6622 அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரலி).

1198. நான் ஒரு முறை நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் இன்னொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு) கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அபூ மூஸாவே' அல்லது 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!' என்றார்கள். நான், 'சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தம் மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது'' என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள், 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி 'கொடுப்பதில்லை' அல்லது 'ஒருபோதும் கொடுக்க மாட்டோம்'. எனவே, 'அபூ மூஸாவே' அல்லது அப்துல்லாஹ் இப்னு கைஸே' நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்'' என்றார்கள். (அவ்வாறே அபூ மூஸா (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.) பிறகு அபூ மூஸா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அபூ மூஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூ மூஸா (ரலி) அவர்கள் எடுத்து வைத்து 'வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)'' என்றார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்களின் அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, 'இவர் யார்?' என்று முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் 'இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தைவிட்டுவெளியேறி) யூதராகிவிட்டார்'' என்றார்கள். (மீண்டும் அபூ மூஸா (ரலி) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) 'அமருங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரணதண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)'' என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரண தண்டனையளிக்கும் படி (அபூ மூஸா (ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். பிறகு அவர்கள் இருவரும் இரவில் நின்று வணங்குவது குறித்து பேசிக்கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் (முஆத் (ரலி) அவர்கள்) 'நான் இரவில் சிறிது நேரம்) நின்று வணங்குகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். நின்று வணங்குவதற்கு நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்'' என்றார்கள்.

புஹாரி : 6923 அபூபுர்தா (ரலி).

Friday, March 07, 2008

கஃப் பின் அஷ்ரஃப் என்ற யூத வெறியனைக் கொன்றது.

1179. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்'' என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(சரி) சொல்'' என்றார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இந்த மனிதர் (முஹம்மத் - ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்'' என்று (நபி - ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, 'உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்'' என்றும் கூறினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்'' என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம்.


அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)'' என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, 'நீ எங்களுக்கு ஒரு வஸக்கு... அல்லது இரண்டு வஸக்கு... (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்'' என்று கூறினார்கள். அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், 'சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'நீ எதை விரும்புகிறாய் (கேள்)?' என்று கூறினர். கஅப் இப்னு அஷ்ரஃப், 'உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)'' என்று கூறினார்கள்'' (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, 'இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்'' என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.


(பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா (ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். - அபூ நாயிலா (ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் - அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், 'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறு யாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்'' என்று பதிலளித்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்'' என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை'' என்று கூறினார்கள். மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)'' என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)'' என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்'' என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.

புஹாரி :4037 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

Wednesday, March 05, 2008

நபி (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களால் இழைக்கப்பட்ட தீங்குகளிலிருந்து அல்லாஹ்வின் பாதுகாப்பை வேண்டுதல்.

1176. நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் 'ஃபதக்' நகர் முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணமானார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டார்கள். இப்னு கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். - இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வணங்கிகளான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள். அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது அப்துல்லாஹ் இப்னு உபை தம் மேல் துண்டால் தம் மூக்கைப் பொத்திக்கொண்டு, 'எங்களின் மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு சலாம் சொன்னார்கள். பிறகு, தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் (வசனங்களை) ஓதியும் காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல், 'மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனாலும்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உம்முடைய இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு (இதை) எடுத்துச் சொல்லும்'' என்றார். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள், '(ஆம். இறைத்தூதர் அவர்களே! இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்'' என்றார்கள். இதையடுத்து முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டே ஒருவர் மீதொருவர் பாய்ந்து (தாக்கிக்) கொள்ள முனைந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். (அமைதி ஏற்பட்ட) பிறகு தம் வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, 'சஅதே! அபூ ஹுபாப் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?' என்று கூறி, 'அப்துல்லாஹ் இப்னு உபை இப்படி இப்படிக் கூறினார்'' என்று தெரிவித்தார்கள்.


அதற்கு ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், 'அவரை மன்னித்துவிட்டு விடுங்கள், இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகர வாசிகள் அவருக்குக் கீரிடம் அணிவித்து அவருக்கு முடி சூட்டிட முடிவு செய்திருந்த நிலையில் தான் அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த மார்க்கத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்தியத்தின் மூலம் அவர்களின் முடிவை அவன் நிராகரித்தபோது அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்'' என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள்.

புஹாரி :6254 உர்வா பின் ஜூபைர் (ரலி).

1177. நபி (ஸல்) அவர்களிடம், 'தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்'' என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், 'தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது'' என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்'' என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது, 'மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்'' (திருக்குர்ஆன் 49:09) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது.

புஹாரி;:2691 அனஸ் (ரலி).

Friday, February 22, 2008

உடன்படிக்கையை மீறுவோர் மீது....

1155. (யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். ஸஅத் (ரலி) அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்'' என்று (மக்களிடம்) கூறினார்கள். ஸஅத் (ரலி) வந்து அல்லாஹ்வின் தூதருக்கு அருகே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். ஸஅத் (ரலி), 'அப்படியென்றால் நான் அவர்களிடையேயுள்ள போரிடும் வலிமையுள்ளவர்களைக் கொன்று விட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கிறேன்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்களின் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி :3043 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1156. அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத் (ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு 'எங்கே? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது 'பனூ குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள். (பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தீர்ப்பை ஸஅத் இப்னு முஆத் (ரலி), 'பனூ குறைழாக்களில் போர் புரியும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்படவேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி: 4122 ஆயிஷா (ரலி).

1157. (காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தபோது) ஸஅத் (ரலி), 'இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர் புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் என்னுடைய காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்து விடு'' என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரின் நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களின் கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த 'பனூ ஃம்பார்' குலத்தாருக்கு ஸஅத் அவர்களின் கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள், 'கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழிய 'ஸஅத்' (ரலி) இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே ஸஅத் (ரலி) இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக!.

புஹாரி 4122 ஆயிஷா (ரலி).

Thursday, February 21, 2008

யூதர்களை நாடு கடத்தியது.

1153. நாங்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். உடனே நாங்கள் அவர்களுடன் புறப்பட்டுச் சென்று 'பைத்துல் மித்ராஸ்' எனுமிடத்தை அடைந்தோம். அங்கு நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, 'யூதர்களே! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (இவ்வுலகிலும் மறு உலகிலும்) நீங்கள் சாந்தி அடைவீர்கள்'' என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதைக் கேட்ட யூதர்கள், 'அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்'' என்று கூறினார்கள். 'இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு மீண்டும் (இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்து) அவ்வாறே கூறினார்கள். அப்போதும் யூதர்கள், 'அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்'' என்று கூறினர். பிறகு மூன்றாம் முறையும் (அவ்வாறே) நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களை (இந்த ஊரிலிருந்து) நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் யார் தம் (அசையாச்) சொத்துக்கு பதிலாக ஏதேனும் (விலையைப்) பெற்றால் அச்சொத்தை அவர் விற்று விடட்டும். இல்லையேல், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்'' என்றார்கள்.

புஹாரி :6944 அபூஹூரைரா (ரலி).


1154. பனூ நளீர் குலத்தாரும் பனூ குறைழா குலத்தாரும்; (நபி - ஸல் அவர்களின் மீது) போர் தொடுத்தனர். எனவே, பனூ நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்) மீது கருணை காட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க) விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தினரும் போர் தொடுத்தபோது அவர்களின் ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும், அவர்களின் உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்ட (பனூ குறைழாக்கள்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்க அவர்கள் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர். அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான 'பனூ கைனுகா' கூட்டத்தாரையும் பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.

புஹாரி :4028 இப்னு உமர் (ரலி).