Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts

Saturday, August 09, 2008

இல்லை என்று சொல்லாத தாராள மனம்.

1493. நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் 'இல்லை' என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) கூறக் கேட்டேன்.

புஹாரி :6034 ஜாபிர் (ரலி).

1494. ''பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, 'நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!'' என்று அபூ பக்ர் (ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!'' என்றேன். அபூ பக்ர் (ரலி)எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக!'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்.

புஹாரி :2296 ஜாபிர்(ரலி).

1495. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்'' என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப் படுகிறோம்'' என்றார்கள்.

புஹாரி :1303 அனஸ் (ரலி).

1496. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்.

புஹாரி :5998 ஆயிஷா (ரலி).

1497. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ்அத்தமீமீ (ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப் படமாட்டார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5997 அபூஹூரைரா (ரலி).

1498. (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6013 ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி).

Thursday, June 19, 2008

பிறர் வீட்டில் நுழைய அனுமதி முறையாகக் கேட்டல்.

1392. என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள்.அதற்கு நான், 'நான்தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'நான் நான் என்றால்...?' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.

புஹாரி : 6250 ஜாபிர் (ரலி).

Friday, March 07, 2008

கஃப் பின் அஷ்ரஃப் என்ற யூத வெறியனைக் கொன்றது.

1179. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்'' என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(சரி) சொல்'' என்றார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இந்த மனிதர் (முஹம்மத் - ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்'' என்று (நபி - ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, 'உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்'' என்றும் கூறினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்'' என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம்.


அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)'' என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, 'நீ எங்களுக்கு ஒரு வஸக்கு... அல்லது இரண்டு வஸக்கு... (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்'' என்று கூறினார்கள். அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், 'சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'நீ எதை விரும்புகிறாய் (கேள்)?' என்று கூறினர். கஅப் இப்னு அஷ்ரஃப், 'உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)'' என்று கூறினார்கள்'' (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, 'இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்'' என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.


(பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா (ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். - அபூ நாயிலா (ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் - அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், 'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறு யாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்'' என்று பதிலளித்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்'' என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை'' என்று கூறினார்கள். மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)'' என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)'' என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்'' என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.

புஹாரி :4037 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

Monday, December 17, 2007

மரணித்தவர் விட்டுச் செல்லும் சொத்து வாரிசுகளுக்கே.

1044. கடன்பட்டு இறந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது 'இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று கேட்பார்கள். 'கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்' என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் 'நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!'' என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), 'இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! இறைநம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்!'' என்று கூறினார்கள்.

புஹாரி :2298 அபூஹூரைரா (ரலி).

Friday, December 07, 2007

வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிக் கொடுத்தல்.

1032. ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது' என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், 'அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை' என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.

Sunday, November 25, 2007

கடனைத் திருப்பிச் செலுத்த வசதியுள்ளவன் பற்றி....

1008. ''செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒத்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2288 அபூஹுரைரா (ரலி).

Saturday, November 24, 2007

கடனாளிக்கு அதிக கால அவகாசமளித்தல்.

1006. ''உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் 'நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?' எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், 'வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!'' என்று கூறினார். உடனே, 'அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு விடுங்கள்!' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2077 ஹுதைஃபா (ரலி).

1007. ''(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2078 அபூஹுரைரா (ரலி).

Friday, November 23, 2007

கடனாளி திவாலானால்....

1005. ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தன் பொருளை அப்படியே (கொடுத்தபோது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன்காரர்களை விட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2402 அபூஹுரைரா (ரலி).

Thursday, November 22, 2007

கடனில் சிறிது தள்ளுபடி செய்தல்.

1003. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சத்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) புறப்பட்டு வந்து, 'நன்மை(யான செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?' என்று கேட்டார்கள். அந்த மனிதர், 'நானே இறைத்தூதர் அவர்களே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்'' என்று கூறினார்.

புஹாரி : 2705 ஆயிஷா (ரலி).

1004. இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஹ்பே!'' என்று கூப்பிட்டார்கள். 'இதோ வந்தேன் இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'பாதி' என்பதைக் காட்டும் விதமாகச் சைகை மூலம் காட்டி 'உம்முடைய கடனில் இவ்வளவைத் தள்ளுபடி செய்வீராக!'' என்று கூறினார்கள். 'அவ்வாறே செய்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே!' என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்களிடம் 'எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

புஹாரி :457 கஹ்ப் பின் மாலிக் (ரலி).