Showing posts with label பிரியம். Show all posts
Showing posts with label பிரியம். Show all posts

Saturday, November 29, 2008

அல்லாஹ் அதிக ரோஷக்காரன்.

1755. ''அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்'' (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா (ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களிடம் 'இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதில் கூறினார்கள்.

புஹாரி :4634 அம்ர் பின் அபூவாயில் (ரலி).

1756. நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறை நம்பிக்கையாளர் செய்வதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5223 அபூ ஹுரைரா (ரலி).

1757. அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5222 அஸ்மா (ரலி) .

Wednesday, October 01, 2008

அன்ஸாரிகளின் சிறப்புகள்.

1628. ''(உஹதுப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்...'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:122-ம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், 'அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்'' என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறான்.

புஹாரி : 4051 ஜாபிர் (ரலி).

1629. அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக, நான் (பெரிதும்) துக்கப்பட்டேன். நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக'' என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.

புஹாரி: 4906 மூஸாபின் உக்பா (ரலி).

1630. (அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்'' ஒரு மணவிழாவிலிருந்து வருவதை'' என்று சொன்னதாக நினைக்கிறேன் - உடனே நின்று கொண்டு, 'இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

புஹாரி : 3785 அனஸ் (ரலி).

1631. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று இரண்டு முறை கூறினார்கள்.

புஹாரி : 3786 அனஸ் (ரலி).

1632. ''அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்து போய் விடுவார்கள். எனவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3801 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

Saturday, August 30, 2008

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1540. நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், '(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'இந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!''என்று கேட்டார்கள்.

புஹாரி :3653 அபூபக்கர் (ரலி).

1541. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் மரண நோயின் போதும்) மிம்பரின் மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்), 'அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு வாழ்வு)தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்'' என்று கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), 'தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினார்கள். நாங்கள் அபூபக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், 'இந்த முதியவரைப் பாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப்பதை எடுத்துக் கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக் கொண்டிருக்க இவர், 'தங்களுக்கு என் தந்தையரும் தாய்களும் அர்ப்பணமாகட்டும்' என்று (அழுதபடி) கூறுகிறாரே'' என்று கூறினார்கள் - இறைத்தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார் - அபூபக்ர் (ரலி) தாம் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூ பக்ர் அவர்கள் தாம். என்சமுதாயத்தாரிலிருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூ பக்ரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்) போதுமானதாகும். (என்னுடைய இந்தப்) பள்ளிவாசலில் உள்ள சாளரங்களில் அபூபக்ரின் சாளரம் தவிர மற்றவை நீடிக்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3904 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1542. நபி (ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா'' என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)'' என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)'' என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 3662 அம்ர் பின் அல் ஆஸ் (ரலி).

1543. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண(முடிய)வில்லையென்றால்..?' என்று, - நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்'' என்று பதில் கூறினார்கள்.

புஹாரி :3659 ஜூபைர் பின்முத்இம் (ரலி).

1544. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, '(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, 'நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்'' என்று கூறியது. எனக் கூறினார்கள். மக்கள் 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?' என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்'' என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், 'ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றி விட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, 'இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே' என்று கூறியது' .இதைக் கேட்ட மக்கள், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்,'நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்'' என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.

புஹாரி 3471 அபூஹூரைரா (ரலி).

Saturday, August 09, 2008

இல்லை என்று சொல்லாத தாராள மனம்.

1493. நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் 'இல்லை' என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) கூறக் கேட்டேன்.

புஹாரி :6034 ஜாபிர் (ரலி).

1494. ''பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, 'நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!'' என்று அபூ பக்ர் (ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!'' என்றேன். அபூ பக்ர் (ரலி)எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக!'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்.

புஹாரி :2296 ஜாபிர்(ரலி).

1495. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்'' என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப் படுகிறோம்'' என்றார்கள்.

புஹாரி :1303 அனஸ் (ரலி).

1496. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்.

புஹாரி :5998 ஆயிஷா (ரலி).

1497. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ்அத்தமீமீ (ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப் படமாட்டார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5997 அபூஹூரைரா (ரலி).

1498. (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6013 ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி).