Showing posts with label புகழ். Show all posts
Showing posts with label புகழ். Show all posts

Sunday, January 25, 2009

பிறரைப் புகழ்ந்து பேசுதல்.

1888. ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், 'அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்'' என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, 'தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்'' என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்'' என்றார்கள்.

புஹாரி : 2662 அபூபக்ரா (ரலி).

1889. நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண்டிருப்பதையும் அவரை மிகைப்படுத்தி (ஒரேயடியாக உயர்த்திப்) புகழ்ந்து கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே, 'நீங்கள் அந்த மனிதரின் முதுகை நாசமாக்கி விட்டீர்கள் - அல்லது துண்டித்து விட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2663 அபூ மூஸா (ரலி).

Saturday, November 29, 2008

அல்லாஹ் அதிக ரோஷக்காரன்.

1755. ''அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்'' (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா (ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களிடம் 'இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதில் கூறினார்கள்.

புஹாரி :4634 அம்ர் பின் அபூவாயில் (ரலி).

1756. நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறை நம்பிக்கையாளர் செய்வதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5223 அபூ ஹுரைரா (ரலி).

1757. அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5222 அஸ்மா (ரலி) .

Monday, November 17, 2008

திக்ரின் சிறப்புகள்.

1724. ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் - லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3293 அபூ ஹுரைரா (ரலி).

1725. 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஏன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6405 அபூஹுரைரா (ரலி).

1726. லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்).

புஹாரி : 6404 அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி).

1727. இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6406 அபூஹூரைரா (ரலி).