Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Wednesday, October 01, 2008

அன்ஸாரிகளின் சிறப்புகள்.

1628. ''(உஹதுப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்...'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:122-ம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், 'அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்'' என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறான்.

புஹாரி : 4051 ஜாபிர் (ரலி).

1629. அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக, நான் (பெரிதும்) துக்கப்பட்டேன். நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக'' என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.

புஹாரி: 4906 மூஸாபின் உக்பா (ரலி).

1630. (அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்'' ஒரு மணவிழாவிலிருந்து வருவதை'' என்று சொன்னதாக நினைக்கிறேன் - உடனே நின்று கொண்டு, 'இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

புஹாரி : 3785 அனஸ் (ரலி).

1631. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று இரண்டு முறை கூறினார்கள்.

புஹாரி : 3786 அனஸ் (ரலி).

1632. ''அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்து போய் விடுவார்கள். எனவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3801 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

Sunday, August 03, 2008

இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.

1473. என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல்அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, 'இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?' என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3535 அபூ ஹுரைரா(ரலி) .

1474. என்னுடைய நிலையும் (மற்ற) இறைத்தூதர்களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதனை, ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டு விட்டு) வியப்படைந்து, 'இச்செங்கல்லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!'' என்று கூறலானார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3534 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி).

Tuesday, July 01, 2008

மூவரில் இருவர் ரகசியம் பேசுதல் கூடாது.

1409. நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6288 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) .

1410. நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும்வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6290 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

Wednesday, June 18, 2008

ஒருவரின் வீட்டுக்குள் நுழையும் முன்பு அனுமதி கோருதல்.

1391. நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா (ரலி) அவர்கள் வந்து, 'நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை'' என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், '(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்' என்று கூறினார்கள்'' என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்' என்றார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?' என்று கேட்டார்கள்.அதற்கு (அங்கிருந்த) உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்'' என்றார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூ மூஸா (ரலி) அவர்களுடன் சென்று 'நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்'' என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்''.

புஹாரி : 6245 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Sunday, June 15, 2008

கெட்ட பெயர்களை நல்ல பெயராக மாற்றுதல்.

1384. ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது 'அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்'' என்று (மக்களால்) சொல்லப்பட்டது. எனவே, அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'ஸைனப்' என்று பெயர் சூட்டினார்கள்.

புஹாரி 6192 அபூஹூரைரா (ரலி).