Showing posts with label ஜகாத். Show all posts
Showing posts with label ஜகாத். Show all posts

Saturday, August 09, 2008

இல்லை என்று சொல்லாத தாராள மனம்.

1493. நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் 'இல்லை' என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) கூறக் கேட்டேன்.

புஹாரி :6034 ஜாபிர் (ரலி).

1494. ''பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, 'நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!'' என்று அபூ பக்ர் (ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!'' என்றேன். அபூ பக்ர் (ரலி)எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக!'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்.

புஹாரி :2296 ஜாபிர்(ரலி).

1495. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்'' என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப் படுகிறோம்'' என்றார்கள்.

புஹாரி :1303 அனஸ் (ரலி).

1496. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்.

புஹாரி :5998 ஆயிஷா (ரலி).

1497. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ்அத்தமீமீ (ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப் படமாட்டார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5997 அபூஹூரைரா (ரலி).

1498. (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6013 ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி).

Monday, March 24, 2008

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய உறுதிமொழி.

1218. ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாஹித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், 'ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின் படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்'' என்று கூறினார்கள்.

1219. மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், 'ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போர் புரியப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் உடனே புறப்பட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3077 இப்னு அப்பாஸ் (ரலி).

1220. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் பற்றிக் கேட்டதற்கு அவர்கள், 'உமக்கு என்ன கேடு? (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலைமை மிகவும் கடுமையானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிக்கு ஸகாத் கொடுத்து வருகிறீரா?' எனக் கேட்டார்கள். அவர், 'ஆம் என்றதும் நபி (ஸல்) அவர்கள், 'கடல்களுக்குப்பால் சென்று வேலை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய உழைப்பின் ஊதியத்தைக் குறைத்துவிடமாட்டான்'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 1452 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Wednesday, March 19, 2008

அரசு ஊழியர்கள் அன்பளிப்பு பெறத் தடை.

1202. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ('அஸ்த்' எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை ('ஸகாத்' வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதோ இல்லையா என்று பாரும்!'' என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து 'இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தம் பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்'' என்று கூறிவிட்டு '(இறைவா! உன்னுடைய செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்'' என்று கூறினார்கள். அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவிற்குத் தம் கையை உயர்த்தினார்கள்.

புஹாரி :6636அபூஹூமைத் அஸ்ஸைதி (ரலி).

Friday, June 08, 2007

ஜக்காத் பொருள் நபி குடும்பத்தாருக்கு ஹராம் என்பது பற்றி..

645. மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹஸன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு 'முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?' எனக் கேட்டார்கள்.


646. நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகிறேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கிறேன். அதற்குள் அது சதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகிறது உடனே அதைப் போட்டு விடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



புஹாரி : 2432 அபூஹுரைரா (ரலி).



647. நபி (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'இது ஸதக்காப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்றார்கள்.


புஹாரி : 2055 அபூஹுரைரா (ரலி)

Saturday, May 05, 2007

ஜகாத் கொடுக்காதவர் நிலை.

579.நான் குறைஷிகள் நிறைந்திருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொரசொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒருவர் அவர்களிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு, '(ஜகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்'' என்று கூறினார். பிறகு திரும்பிவிட்ட அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தேன். அவர் யார் என்று எனக்கு (அப்போது) தெரியவில்லை. பிறகு நான் அவரிடம் 'தாங்கள் கூறியதை மக்கள் வெறுக்கிறார்களோ!'' என்று கேட்டேன். அதற்கவர், 'அவர்கள் விவரமற்றவர்கள்' எனக் கூறினார்.''என் தோழர் என்னிடம் சொன்னார்...'' என அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்து, கூறும் போதே நான் (குறுக்கிட்டு) 'உம்முடைய தோழர் யார்?' எனக் கேட்டேன். 'நபி (ஸல்) அவர்கள் தாம்' எனக் கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் 'அபூதர்ரே! உஹது மலையை நீர் பார்த்திருக்கிறீரா?' எனக் கேட்டார்கள். தம் வேலை ஏதோ ஒன்றுக்காக நபி (ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி பகல் முடிய இன்னம் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு. 'ஆம்'' என்றேன். 'உஹது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்பவில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவர்களோ இதை அறியாதவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங்களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் கேட்க மாட்டேன். மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்க மாட்டேன்'' எனக் கூறினார்.

புஹாரி : 1407 அல் அன்ஹாஃப் பின் கைஸ் (ரலி)

Friday, May 04, 2007

தான தர்மங்களை ஊக்குவித்தல்.

577.நான் நபி (ஸல்) அவர்களுடன் (பாறைகள் நிறைந்த) மதீனாவின் ஹர்ராப் பகுதியில் இஷா (இரவு) நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது உஹத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அபூதர்ரே! (இந்த) உஹத் மலை எனக்காகத் தங்கமாக மாறி, அதிலிருந்து ஒரேயொரு தீனார் (பொற்காசு) என்னிடம் இருந்தாலும் அதை, அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் 'ஓர் இரவு' அல்லது 'மூன்று இரவுகள்' கழிந்து செல்வதைக் கூட நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர'' என்றார்கள். -(இந்த இடத்தில் அபூதர்) தம் கையால் (வல, இட, முன் ஆகிய பக்கங்களில்) சைகை செய்து காட்டினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'அபூதர்ரே!' என்று அழைத்தார்கள். நான், 'இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், '(இம்மையில் செல்வம்) அதிகமானவர்களே, (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள். இப்படி இப்படியெல்லாம் (தம் செல்வத்தை இறையடியார்களிடையே) செலவிட்டவர்களைத் தவிர!'' என்றார்கள். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள், 'அபூதர்! நான் திரும்பி வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்' என்று கூறிவிட்டு நடந்து என்னைவிட்டு (சிறிது தூரம் சென்று) மறைந்துவிட்டார்கள். அப்போது ஒரு குரலைக் கேட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். நான் (குரல் வந்த திசையை நோக்கிப்) போகலாம் என எண்ணினேன். பிறகு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), 'இந்த இடத்திலேயே இருங்கள்' என்று சொன்னது நினைவுக்கு வரவே அங்கேயே இருந்துவிட்டேன். (நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்ததும்,) 'இறைத்தூதர் அவர்களே! ஏதோ குரலை கேட்டேன். உங்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். (அங்கு வரலாம் என்று எண்ணினேன்.) பிறகு உங்களின் சொல்லை நினைவு கூர்ந்தேன். எனவே, (இங்கேயே) இருந்துவிட்டேன்'' என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அது (வானவர்) ஜிப்ரீல் (அவர்களின் குரல் தான்). அவர் என்னிடம் வந்து 'என் சமுதாயத்தாரில் இறைவனுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைகிறவர் சொர்க்கம் புகுவார்' என்று தெரிவித்தார்' என்றார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர் விபச்சாரம் புரிந்தாலுமா? அவர் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், '(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் (சொர்க்கம் புகுவார்)'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :6268 அபூதர் (ரலி)

578.ஒருநாள் இரவு நான் (வீட்டிலிருந்து) வெளியேறினேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் யாரும் இருக்கவில்லை. (அந்தச் சமயத்தில்) அவர்களுடன் எவரும் வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்று நான் எண்ணினேன். எனவே, நான் நிலா (ஒளிபடாத) நிழலில் நடக்கலானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்து 'யார் அது?' என்று கேட்டார்கள். நான் 'அபூதர். அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் 'அபூதர்ரே! (இங்கே) வாருங்கள்!'' என்றார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள் '(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)'' என்றார்கள். இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் 'இங்கேயே அமர்ந்திருங்கள்'' என்று கூறி, சுற்றிலும் கற்கள் இருந்த ஒரு சம வெளியில் என்னை அமரச் செய்தார்கள். 'நான் உங்களிடம் திரும்பி வரும் வரை இங்கேயே அமர்ந்திருங்கள்'' என என்னிடம் சொல்லிவிட்டு, (பாறைகள் நிறைந்த) ஹர்ராப் பகுதியில் நடந்து சென்றார்கள்.பிறகு அவர்களை நான் காணமுடியவில்லை. நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்கள். வெகு நேரமாகியும் என்னிடம் அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் முன்னோக்கி வந்து கொண்டே 'அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே!'' என்று கூறுவதைக் கேட்டேன். அவர்கள் வந்தபோது என்னால் பொறுமையாக இருக்க முடியாமல் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ஹர்ராப் பகுதியில் தாங்கள் யாரிடம் பேசினீர்கள்? தங்களுக்கு யாரும் எந்தப் பதிலும் அளிப்பதை நான் கேட்கவில்லையே?' என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் 'அது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். அவர் ஹர்ராப் பகுதியில் என் முன் தோன்றி, '(ஏக இறைவனாகிய) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் இறப்பவர் சொர்க்கம் செல்வார் என உங்கள் சமுதாயத்தாருக்கு நற்செய்தி கூறுங்கள்'' என்றார். நான் 'ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா (சொர்க்கம் புகுவார்)?' என்று கேட்டேன். அவர் 'ஆம்' என்றார். நான் 'அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?' என்று (மீண்டும்) கேட்டேன். அவர் 'ஆம்' என்றார். நான் 'அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?' என்று கேட்டேன். அவர் 'ஆம்' என்றார். அவர் மது அருந்தினாலும் சரியே என்றார்.

புஹாரி: 6443 அபூதர் (ரலி)

Thursday, May 03, 2007

ஜகாத் கொடுக்காதோர் தண்டனையில்..

575.நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள்'' என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், 'என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?' என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் 'என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான் 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.

புஹாரி: 6638 அபூதர் (ரலி)

576.''என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அல்லது எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ...அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்ற வில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிட பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனை(க் கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவனைத் அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 1460 அபூதர் (ரலி)

Wednesday, May 02, 2007

ஜகாத் கொடுக்காவிட்டால் பாவம்.

574.குதிரை வைத்திருப்பது மூன்று பேருக்கு மூன்றுவகையான விளைவுகளைத் தருவதாகும். ஒருவருக்கு நற்கூலி பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக பசுமையான ஒரு வெட்டவெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்த குதிரை, தன்னைக் கட்டி வைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்குப் பசும்புல் வெளிகளில் அல்லது தோட்டங்களில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நற்பலன் கிடைக்கும். அதன் கயிறு துண்டிக்கப்பட்டு, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால் அதனுடைய (குளம்பின்) சுவடுகள் அளவிற்கும் அதனுடைய விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நற்பலன்கள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், அதைப் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் கட்டி வைத்துப் பராமரிக்கும் மனிதனாவான். அது அவன் மீதுள்ள பாவச் சுமையாகும். நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகளின் ஜகாத் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை. 'எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனை (அதன் நற்பலனைக்) கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனையைக்) கண்டு கொள்வான்'' என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர'' என்று கூறினார்கள்.

புஹாரி: 2860 அபூஹுரைரா (ரலி)

Monday, April 30, 2007

ஜகாத் கொடுப்பவர் கொடுக்காதவர் பற்றி

569.நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் இப்னு வலீத், அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஜகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஜகாத் தர மறுத்துள்ளார். காலிதை (ரலி)ப் பொருத்தவரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கிறீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் இறைவழியில் வழங்கிவிட்டாரே, அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி), அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையாக இருப்பதால் அவர் ஜகாத்தும் அதைப் போன்ற இன்னொரு மடங்கும் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினார்கள்.

புஹாரி :1468 அபூஹூரைரா (ரலி)

Sunday, April 29, 2007

குதிரைகளின் அடிமைகளின் ஜகாத்.

568.''(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை..''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1463 அபூஹுரைரா (ரலி)

Saturday, April 28, 2007

ஜகாத் அளவு

567.''ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் என்பது 60ஸாவு) தானியத்தில் ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1405 அபூ ஸயீத் (ரலி)