Showing posts with label சொர்க்கம். Show all posts
Showing posts with label சொர்க்கம். Show all posts

Wednesday, December 24, 2008

அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.

1809. சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்'' என்று சொன்னது. சொர்க்கம், 'எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்'' என்று கூறியது. அல்லாஹ் சொர்க்கத்திடம், 'நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்'' என்று கூறினான். நரகத்திடம் 'நீ வேதனை(க்காகத்)தான். உன்மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்'' என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் 'போதும்! போதும்!'' என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை. மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

புஹாரி : 4850 அபூஹூரைரா (ரலி).

1810. (நரகவாசிகள் நரகத்தின் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) 'இன்னும் அதிகம் இருக்கிறதா? 'என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது 'போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!'' என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6661 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1811. (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்'' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே! 'என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்'' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டு விடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை'' என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன்19:39வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்'' என்றும் கூறினார்கள்.

புஹாரி : 4730 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1812. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு 'மரணம்' (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் 'சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது. நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது'' என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்குமேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6548 இப்னு உமர் (ரலி).

1813. (நரகத்தில்) இறை மறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ளதூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6551 அபூஹுரைரா (ரலி).

1814. நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள், பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

1815. (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது அவர்கள், '(இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'அவர்களிலுள்ள துர்பாக்கியசாலி ஒருவன் முன்வந்தபோது...'' எனும் (திருக்குர்ஆன் 91:12 வது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, 'அபூ ஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத் (தைக் கொல்வ)துக்காக முன் வந்தான்'' என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, '(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?' என்று கேட்டபடி உபதேசித்தார்கள்.

புஹாரி : 4942 அப்துல்லாஹ் பின் ஸமா (ரலி).

1816. நபி (ஸல்) அவர்கள், 'குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு ஆமிர் இப்னிலுஹை என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதலில் 'சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி) விட்டவர்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3521 அபூ ஹுரைரா(ரலி).

Monday, December 22, 2008

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தோர் சிறப்பு.

1807. அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்'' என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்'' என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்'' என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3326 அபூஹுரைரா (ரலி).

Sunday, December 21, 2008

சுவன வாசிகளின் மனைவிமார்களின் கூடாரங்கள்.

1806. (சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறை நம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3243 (அபூ மூஸா) அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ (ரலி).

Saturday, December 20, 2008

சுவனத்தில் புகும் முதல் அணியினர் பற்றி....

1805. 'சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

புஹாரி : 3327 அபூஹுரைரா (ரலி).

Thursday, December 18, 2008

சுவன வாசிகளிடம் அல்லாஹ் ஒருபோதும் கோபிப்பதில்லை.

1802. அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி சொர்க்கவாசிகளே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திருப்தி அடைந்தீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகியவற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா? என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன் என்பான். அவர்கள் அதிபதியே! அதை விடச் சிறந்தது எது? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் உங்கள் மீது என் திருப்தியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்பட மாட்டேன் என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6549 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

Wednesday, December 17, 2008

சுவன மரத்தின் சிறப்பு.

1799. சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதை கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால், (படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 56:30 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4881 அபூஹுரைரா (ரலி).

1800. சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு ஆண்டுகள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6552 ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி).

1801. சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6553 அபூ ஸயீத் (ரலி).

Tuesday, December 16, 2008

சுவனத்தின் சிறப்புகளும் சுவனவாசிகளும்.

1797. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6487 அபூஹுரைரா (ரலி).

1798. ''எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்'' என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், 'மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3244 அபூஹுரைரா (ரலி).

Saturday, December 06, 2008

சுவன வாசிகள் பெறும் மகிழ்ச்சி.

1778. நபி (ஸல்) அவர்கள் 'மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு 'உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு 'பாலாம்' மற்றும் 'நூன்' என்றார். மக்கள் 'இது என்ன?' என்று கேட்டார்கள். அந்த யூதர் '(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்'' என்று கூறினார்.

புஹாரி : 6520 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1779. யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3941 அபூஹுரைரா (ரலி).

Thursday, December 04, 2008

மறுமை நாள். சொர்க்கம் நரகம்

1773. மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4729 அபூஹுரைரா (ரலி).

1774. யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, 'நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்'' என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, 'அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.

புஹாரி 4811 இப்னு மஸ்ஊத் (ரலி).

1775. அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6519 அபூஹுரைரா (ரலி).

1776. அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு 'நானே அரசன்!'' என்று சொல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7412 இப்னு உமர் (ரலி).

Monday, November 10, 2008

அல்லாஹ்வின் திருநாமங்கள்.

1714. அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி).

Tuesday, September 23, 2008

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிள் சிறப்புகள்

1611. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூற 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

புஹாரி : 1121 இப்னு உமர்(ரலி).

Thursday, September 18, 2008

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் சிறப்பு (2)

1604. (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3802 அல்பராஉ (ரலி).

1605. நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2615 அனஸ் (ரலி).

Tuesday, September 09, 2008

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1573. இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 3432 அலீ (ரலி).

1574. ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3411 அபூ மூஸா (ரலி).

1575. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி).

1576. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் கூறினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி கூறினார்கள்)'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3819 இஸ்மாயீல் (ரலி).

1577. கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள்.

புஹாரி : 3818 ஆயிஷா (ரலி).

1578. ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)'' என்று கேட்டேன்.

புஹாரி: 3821 ஆயிஷா (ரலி).

Sunday, April 06, 2008

அறப்போரில் கொல்லப்பட்டவர் சுவனத்தில்...

1241. உஹுதுப் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார்.

புஹாரி : 4046 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1242. நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), 'உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் நான் எடுத்துரைக்கிறேன்; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள்; அவரை எதுவும் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், 'அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்'' என்று கூறினார். பிறகு, அவரின் எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர. அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்), 'கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக் கொண்டார்)' என்று (அறிவிக்கப்பட்டதாக) கருதுகிறேன்'' என்று கூறுகிறார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு, 'நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தான் பெற்ற நற்பலனைக் குறித்து திருப்தி) கொள்ளும்படிச் செய்தான்' என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ''நாங்கள் எங்கள் இறைவனைச் சென்றடைந்து விட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்து விட்டான். அவனைக் குறித்து நாங்கள் திருப்தியடைந்தோம். தன்(வெகு மதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்'' என்னும் இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம் குலத்தாரைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், பனூ உஸைய்யா ஆகிய கிளையினருக்குக் கேடு நேர, நாற்பது நாள்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள்.

புஹாரி :2801 அனஸ் (ரலி).

Thursday, April 03, 2008

கொன்றவர் கொல்லப்பட்டவர் இருவரும் சுவனத்தில்...

1238. அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2826 அபூஹுரைரா (ரலி).

Sunday, March 30, 2008

அறப்போருக்குச் செல்வதின் சிறப்பு.

1229. போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லது அவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்து விடுவேனோ என்று (அச்சம்) மட்டும் இல்லையானால் (நான்) அனுப்பும் எந்த இராணுவத்திற்குப் பின்னரும் (நானும் போகாமல்) உட்கார்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''


புஹாரி 36 அபூஹுரைரா (ரலி).

1230. இறைவழியில் போரிடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை அவரின் வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


புஹாரி : 3123 அபூஹுரைரா (ரலி).

1231. 'இறைவழியில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும் ஈட்டியால் குத்தப்படும்போது இருந்தது போல் மறுமை நாளில் அப்படியே இருக்கும். அதிலிருந்து இரத்தம் பீறிட்டு ஒடும். ஆனால் அதன் நிறம் இரத்தத்தினுடைய நிறமாக இருந்தாலும் அதன் வாடை கஸ்தூரி வாடையாகவே இருக்கும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.


புஹாரி : 237 அபூஹுரைரா (ரலி).