Showing posts with label வேதம். Show all posts
Showing posts with label வேதம். Show all posts

Thursday, December 04, 2008

மறுமை நாள். சொர்க்கம் நரகம்

1773. மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4729 அபூஹுரைரா (ரலி).

1774. யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, 'நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்'' என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, 'அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.

புஹாரி 4811 இப்னு மஸ்ஊத் (ரலி).

1775. அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6519 அபூஹுரைரா (ரலி).

1776. அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு 'நானே அரசன்!'' என்று சொல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7412 இப்னு உமர் (ரலி).

Thursday, September 25, 2008

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)அவர்களின் சிறப்புகள்.

1614. நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், 'இவர் சொர்க்கவாசி'' என்று சொல்லி நான் கேட்டதில்லை. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைத் தவிர, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைக் குறித்தே, 'மேலும், இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து சாட்சி சொல்பவர் ஒருவர் இது போன்ற வேதத்திற்கு சாட்சி கூறினார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்'' என்னும் (திருக்குர்ஆன் 46:10) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி : 3812 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

1615. நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், 'இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார். அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, 'நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், 'இவர் சொர்க்கவாசி' என்று கூறினர்'' என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக் கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் - அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் - அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், 'இதில் ஏறு'' என்று சொல்லப்பட்டது. நான், 'என்னால் இயலாதே'' என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பின்னாலிருந்து உயர்த்தி விட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், 'நன்கு பற்றிப் பிடித்துக் கொள்'' என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, 'அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறங்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) தாம்.

புஹாரி : 3813 கைஸ் பின் உபாத் (ரலி).

Tuesday, September 16, 2008

உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு.

1601. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் தாம் அவர்கள்'' என்று அனஸ் (ரலி) கூறினார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3810 அனஸ் (ரலி).

1602. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, 'வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..'' என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), 'என் பெயரைக் குறிப்பிட்டா. (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.

புஹாரி : 3809 அனஸ் (ரலி).

Monday, September 15, 2008

அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு.

1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.

புஹாரி : 3763 அபூமூஸா (ரலி).

1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.

புஹாரி : 5000 ஷகீக் பின் ஸலாமா (ரலி).

1599. எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5002 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்).

1600. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3758 மஸ்ரூக் (ரலி).