மறுமை நாள். சொர்க்கம் நரகம்
1773. மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 4729 அபூஹுரைரா (ரலி).
1774. யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, 'நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்'' என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, 'அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.
புஹாரி 4811 இப்னு மஸ்ஊத் (ரலி).
1775. அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6519 அபூஹுரைரா (ரலி).
1776. அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு 'நானே அரசன்!'' என்று சொல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7412 இப்னு உமர் (ரலி).
No comments:
Post a Comment