நயவஞ்சகர்களின் பண்புகள்.
1765. ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள்'' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்'' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர் (ரலி) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை'' என்று அவர்கள் சாதித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை'' என்று கூறினார்கள். அப்போது, 'இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது'' என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவு படுத்திவிட்டான்)'' என்று கூறினார்கள்.
1766. அப்துல்லாஹ் இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி (ஸல்) அவனுடைய உடலை வெளியிலெடுக்க செய்து அவன் உடலில் தம் எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தம் சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள்.
1767. (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்'' என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை'' என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்'' என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.
1768. இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் 'குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்' அல்லது 'ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்' (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், 'நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?' என்று கேட்டார். மற்றொருவர், 'நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை' என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், 'நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ், '(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்த்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை'' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.
1769. நபி (ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்து விட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் 'இவர்களைக் கொல்வோம்!'' என்றனர். அப்போது 'நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?' (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. 'நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 4567 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).
புஹாரி : 4568 அல்கமா பின் வக்காஸ் (ரலி).
புஹாரி : 3617 அனஸ் (ரலி).
No comments:
Post a Comment