Showing posts with label ஆட்சி. Show all posts
Showing posts with label ஆட்சி. Show all posts

Thursday, March 27, 2008

பருவமடையும் வயது.

1223. நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) கூறினார்: உமர் இப்னு அப்தில் அஜீஸ் (ரஹ்) கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர் (ரலி) அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், '(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்'' என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (ராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்கு எழுதினார்கள்.

புஹாரி : 2664 இப்னுஉமர் (ரலி).

Friday, March 21, 2008

ஆட்சித் தலைவருக்கு உறுதிப் பிரமாணம் செய்தல்.

1208. நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்தி) அமர்ந்திருந்தேன். (ஒரு முறை) அபூ ஹுரைரா (ரலி) கூறினார். 'பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் உத்திரவிடுகிறீர்கள்?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, 'அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்கவிருக்கிறான்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3455 அபூஹூரைரா (ரலி).

1209. (ஒரு முறை) 'விரைவில் (அன்சாரிகளான) உங்களை விடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். இன்னும் நீங்கள் வெறுக்கிற சில காரியங்கள் நடக்கும்.' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உங்களின் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி 3603 இப்னு மஸ்ஊது (ரலி).

1210. அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தது போல் என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'எனக்குப் பிறகு (உங்களை விட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் 'ஹவ்ளுல் கவ்ஸர்' என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3792 உஸைத் பின் ஹூளைர் (ரலி).

Monday, March 17, 2008

பொறுப்பாளி பொறுப்பை சரியாக நிறைவேற்றுதல் பற்றி..

1199. நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2554 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1200. (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 7150 மஅகில் பின் யஸார் (ரலி).

Sunday, March 16, 2008

ஆட்சி அதிகாரத்தை கேட்டுப் பெறாதே.

1197. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து'' என்றார்கள்.

புஹாரி : 6622 அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரலி).

1198. நான் ஒரு முறை நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் இன்னொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு) கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அபூ மூஸாவே' அல்லது 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!' என்றார்கள். நான், 'சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தம் மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது'' என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள், 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி 'கொடுப்பதில்லை' அல்லது 'ஒருபோதும் கொடுக்க மாட்டோம்'. எனவே, 'அபூ மூஸாவே' அல்லது அப்துல்லாஹ் இப்னு கைஸே' நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்'' என்றார்கள். (அவ்வாறே அபூ மூஸா (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.) பிறகு அபூ மூஸா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அபூ மூஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூ மூஸா (ரலி) அவர்கள் எடுத்து வைத்து 'வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)'' என்றார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்களின் அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, 'இவர் யார்?' என்று முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் 'இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தைவிட்டுவெளியேறி) யூதராகிவிட்டார்'' என்றார்கள். (மீண்டும் அபூ மூஸா (ரலி) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) 'அமருங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரணதண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)'' என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரண தண்டனையளிக்கும் படி (அபூ மூஸா (ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். பிறகு அவர்கள் இருவரும் இரவில் நின்று வணங்குவது குறித்து பேசிக்கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் (முஆத் (ரலி) அவர்கள்) 'நான் இரவில் சிறிது நேரம்) நின்று வணங்குகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். நின்று வணங்குவதற்கு நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்'' என்றார்கள்.

புஹாரி : 6923 அபூபுர்தா (ரலி).

Saturday, March 15, 2008

தனக்குப் பின் தலைமைத்துவத்துக்கு பிறரை நியமித்தல் பற்றி..

1196. உமர் (ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள்'' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர் (ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை'' என்று கூறினார்கள்.

புஹாரி :7218 இப்னு உமர் (ரலி).