Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Saturday, December 27, 2008

மரணித்தவருக்கு சொர்க்கமா நரகமா என அறிவிக்கப் படுதல்.

1822. ''உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிறவரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1379 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1823. ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும்போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, 'யூதர்கள் அவர்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்'' எனக் கூறினார்கள்.

1824. ''ஒர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'இந்த மனிதரைப்பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான். அவனிடம் (நீகெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான். ''அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்'' என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1374 அனஸ் (ரலி).

1825. கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரண்டு வானவர்களைக்) கொண்டு வரப்படும் (கேள்வி கேட்கப்படும்); பிறகு (அவர்களிடம்) அந்த இறைநம்பிக்கையாளர், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்'' என சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ் 'நம்பிக்கை கொள்கிறவர்களை இவ்வுலக சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்'' (திருக்குர்ஆன் 14:27) எனக் குறிப்பிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1369 பராவு இப்னு ஆஸிப் (ரலி).

1826. பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில்; இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, 'இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை'' என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா (ரஹ்) கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி (ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.

புஹாரி :3976 அபூதல்ஹா (ரலி).

1827. 'நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) தமக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும்வரை மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். '(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, 'மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார்' என்று அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:08) கூறவில்லையா?' எனஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும், எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்து விடுவான்' என்று கூறினார்கள்''.

புஹாரி : 103 இப்னு அபீ முலைக்கா (ரலி).

1828. ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்காக ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7108 இப்னு உமர் (ரலி).

Sunday, December 07, 2008

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.

1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப்பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து,'அபுல்காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப் படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்''.

புஹாரி : 125 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

1781. நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தரமாட்டேன்!''என்றான். நான் 'அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!' எனக் கூறினேன். அதற்கவன் 'நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!'' என்றான். அப்போதுதான் 'நம்முடைய வசனங்களை நிராகரித்து, '(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!' என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) கருணையாளனான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?' என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!''.

புஹாரி :2091 கப்பாப் (ரலி).

Monday, December 01, 2008

கொலைகள் செய்தவர் தவ்பா அங்கீகரிக்கப் படுதல்.

1760. பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, '(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், 'கிடைக்காது'' என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், '(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!'' என்று அவருக்குக் கூறினார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார். அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) தர்க்கித்தனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, 'நீ நெருங்கி வா!'' என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, 'நீ தூரப்போ!'' என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, 'அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்'' என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3470 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).

1761. நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, '(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?' என்று கேட்டதற்கு இப்னு உமர் (ரலி), 'அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, 'நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்பான். அதற்கு, அவன் 'ஆம், என் இறைவா!' என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், 'நாம் இத்தோடு ஒழிந்தோம்' என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், 'இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்' என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், 'இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என்று கூறுவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2441 ஸஃப்வான் பின் முஹ்ரிஜ் (ரலி).

1762. ''தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இதுவல்லாது நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்துகொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப் போனார்கள். (போன இடத்தில்) போரிடும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான். 'இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்' என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த 'அகபா இரவில்' இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்கு பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; 'அல் அகபா' பிரமாணத்தைவிட 'பத்ர்' மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே! (தபூக் போரில் கலந்து கொள்ளாததையடுத்து நடந்த நிகழ்ச்சிகள் குறித்த) என்னுடைய செய்திகள் சில பின்வருமாறு: அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாதபோது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ்நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின்போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று (இரண்டு பொருள்படும்படி பேசிப் பாசாங்கு செய்து) அதை மறைக்காமல் இருந்ததில்லை. ஆனால், தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயியில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்லவேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர் பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும் விட்டார்கள். 'எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனைப் பேருக்கு இடமளிக்காது' எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.(போரில் கலந்துகொள்ளாமல்) தலைமறைவாகி விடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு (வஹீ) வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற) அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில்) காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லலாவேன். என்னுடைய பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்துவிடுவேன். '(நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப்படவேண்டும்?)' என்று என் மனத்திற்குள் கூறிக்கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடுபட்டனர். (ஒரு வழியாகப் பயண ஏற்பாடு முடிந்தது.) பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு (ஒரு) காலை நேரத்தில் புறப்பட்டு விட்டார்கள். அப்போதும் நான் என்னுடைய பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை. 'நபி (ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்களில் பயண ஏற்பாடுகளைச் செய்து அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வேன்' என்று நான் (என் மனத்திற்குள்) சொல்லிக் கொண்டேன். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு (அன்றைய இரவும் கழிந்து) மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் அந்த பிற்பகுதியும் செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) என்னுடைய நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது. முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். (எனக்கு) அந்தப் போர் கை நழுவிவிட்டது. நான் உடடினயாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். (ஆனால், என்ன செய்வது?) அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்களிடையே சுற்றி வரும்போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்து கொண்டிருக்கும்போது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'கஅப் என்ன ஆனார்?' என்று கேட்டார்கள். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! அவரின் இரண்டு சால்வைகளும் (ஆடை அணிகலன்களும்) அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதும் தான் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டன'' என்று கூறினார். உடனே, முஆத் இப்னு ஜபல் (ரலி), (அந்த மனிதரை நோக்கி), 'தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) மௌனமாகவே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியபோது கவலை என் மனத்தில் (குடி) புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன். 'நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?' என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் (ஆலோசனை) உதவி தேடினேன். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவை) நெருங்கி வந்துவிட்டார்கள் என்று (செய்தி) சொல்லப்பட்டபோது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தைவிட்டு விலகிவிட்டது. 'பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது. அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். அவன் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்து விடுவான்)' என்று உணர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள்.(பொதுவாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். (வழக்கம் போல்) அதை அவர்கள் செய்தபோது, (தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல்) பின்தங்கி விட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (தாம் போருக்கு வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்று அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள். அப்போது, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்னபோது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போன்று புன்னகைத்தார்கள். பிறகு, 'வாருங்கள்'' என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், '(போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்து கொண்டிருக்கவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி (அவருடைய) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்போது) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை'' என்று கூறினேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'இவர் உண்மை சொல்லிவிட்டார்'' (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்களின் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்'' என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமல் போய்விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லிவிடலாமா என்று நான் நினைத்தேன். பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, '(தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கிறார்களா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'ஆம், இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போன்றே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) கூறினார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டதும் தான் அப்போது அவர்கள் இருவருக்கும் (பதிலாகச்) சொல்லப்பட்டது.'' என்று கூறினார்கள். உடனே நான், 'அவர்கள்'' இருவரும் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'முராரா இப்னு ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் இப்னு உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும்'' என்று பத்ருப்போரில் கலந்துகொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்று விட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்களின் விஷயத்தில் மாறிப் போய்விட்டார்கள். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போன்றும் அது எனக்கு அன்னியமானது போன்றும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாள்கள் இருந்தோம். என்னுடைய இரண்டு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர். ஆனால் நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டை விட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்துகொண்டும், கடை வீதிகளில் சுற்றிக் கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேசமாட்டார்கள். நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும்போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது (என்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று) ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள். மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்றபோது, நான் நடந்து சென்று அபூ கத்தாதா (ரலி) அவர்களின் தோட்டத்தின் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. உடனே நான், 'அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயாக?' என்று கேட்டேன். அதற்கு அவர் (பதிலேதும் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போன்றே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாயிருந்தார். (மூன்றாம் முறையாக) மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரண்டு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்த அந்தச் சுவரில் ஏறி (வெளியேறி) னேன். (நிலைமை இவ்வாறு நீடித்துக் கொண்டிருக்க) ஒரு நாள் மதீனாவின் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், 'கஅப் இப்னு மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்?' என்று (என்னைக் குறித்து) விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே, அவர் என்னிடம் வந்து, 'ஃகஸ்ஸான்' நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி)விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம். இதை நான் படித்தபோது, 'இது இன்னொரு சோதனையாயிற்றே!'' என்று (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டு அதை எடுத்துச் சென்று (ரொட்டி சுடும்) அடுப்பிலிட்டு எரித்து விட்டேன்.

ஐம்பது நாள்களில் நாற்பது நாள்கள் கழிந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒரு தூதர் என்னிடம் வந்து, 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , நீங்கள் உங்கள் மனைவியை விட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்'' என்று கூறினார். அதற்கு நான், 'அவளை நான் விவாகரத்துச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டேன். அவர், 'இல்லை. (விவாகரத்து செய்ய வேண்டாம்.) அவரைவிட்டு நீங்கள் விலகி விடவேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத்தூதர் உத்தரவு)'' என்று கூறினார். இதைப் போன்றே என் இரண்டு சகாக்களுக்கும் (நபி (ஸல்) அவர்கள் உத்தரவு) அனுப்பியிருந்தார்கள். எனவே, நான் என் மனைவியிடம், 'உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா!'' என்று சொன்னேன். (என் சகா) ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்களின் மனைவி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, '(என் கணவர்) ஹிலால் இப்னு உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?' என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவு கொள்ள) நெருங்க வேண்டாம்'' என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டேயிருக்கிறார்'' என்றும் (அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினார். கஅப்(ரலி) கூறினார்: என் வீட்டாரில் ஒருவர், 'தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் இப்னு உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடைபுரிய) அனுமதிக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினார். அதற்கு நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்கமாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக (வேறு) இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சலுகை காட்டியிருக்கலாம்)'' என்று கூறி (மறுத்து) விட்டேன். அதற்குப் பின் பத்து நாள்கள் (இவ்வாறே) இருந்தேன். எங்களிடம் பேசக் கூடாதென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாள்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118வது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) 'பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது அப்போது, 'சல்உ' மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், 'கஅப் இப்னு மாலிக்கே! நற்செய்தி பெற்றுக்கொள்!'' என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டேன். 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தபோது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அறிவித்து விட்டார்கள்' என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரண்டு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக்கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி கூறினார்.) மேலும், (மலை மீதிருந்து வந்த) வந்து சேர்ந்தது. எவருடைய குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரண்டு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூ கத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்துகொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், 'அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம்' என்று கூறலாயினர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னபோது, சந்தோஷத்தினால் அவர்கள் தம் முகம் மின்னிக்கொண்டிருக்க, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாள்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன்'' என்று கூறினார்கள்.
நான், 'இறைத்தூதர் அவர்களே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'இல்லை. (என் தரப்பிலிருந்து நான் இதைத் தெரிவிக்கவில்லை.) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்துள்ள வேத அறிவிப்பின் அடிப்படையில்) தான் தெரிவிக்கிறேன்'' என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஏதாவது) சந்தோஷம் ஏற்படும்போது அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகி பிரகாசிக்கும். அவர்களின் முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களின் சந்தோஷத்தை நாங்கள் அறிந்துகொள்வோம். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டபோது, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்மமாக அளித்து விடுகிறேன்'' என்று சொன்னேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது'' என்று கூறினார்கள். 'கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன். இறைத்தூதர் அவர்களே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்'' என்று கூறினேன். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து என்னுடைய இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் கால(மனை)த்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், 'திண்ணமாக, அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள் புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களின் மீதும் அன்சாரிகளின் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான். (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாமல்) விவகாரம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்.) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கடியாகத் தோன்றி அவர்கள் உயிர் வாழ்வதும் மிகக் கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் உறுதிபட அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக்கொள்ளும் பொருட்டு அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 09: 117-119) வசனங்களை அருளினான். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒருபோதும் கருதவில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்ன(வர்களான நயவஞ்சகர்)கள் அழிந்து போனது போன்று நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருளியபோது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான். 'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது, அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்'' என்று (கடிந்த வண்ணம்) அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 09:95, 96) குறிப்பாக, எங்கள் மூவரின் விவகாரம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (பொய்) சத்தியம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களிடமும் உறுதிப்பிரமாணம் பெற்று அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். (எங்களின்) அந்த விவகாரத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிக்கும் வரையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தைத் தள்ளிப்போட்டு வந்தார்கள். இதனால் தான் (9வது அத்தியாயத்தின் 118-வது வசனத்தில்) அல்லாஹ் எங்களைக் குறித்து 'போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்' என்று (போரைக் குறிப்பிட்டுக்) கூறவில்லை. (மாறாக, 'பின்தங்கிவிட்ட மூவர்' என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளான்.) 'நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் பொய்யான சாக்குப் போக்குக் கூறியவர்களின் காரணங்களை உடனுக்குடன் ஏற்றது போன்றல்லாமல் எங்கள் விவகாரத்தை (உடனே தீர்க்காது) அல்லாஹ் தள்ளிப்போட்டு வந்தான்'' என்பதே அதன் கருத்தாகும்.

புஹாரி : 4418 அப்துல்லாஹ் பின் கஃப் (ரலி).

Wednesday, November 12, 2008

நேர்ந்த துன்பத்துக்காக மரணத்தை ஆசிக்காதே.

1717. உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், 'இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!'' என்று கேட்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6351 அனஸ் (ரலி).

1718. நான் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத்) தம் வயிற்றில் ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது 'மரணத்தை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் நான் மரணத்தை வேண்டிப் பிரார்த்தித்திருப்பேன்'' என்று அவர்கள் கூறியதைச் செவியேற்றேன்.

புஹாரி : கைஸ் (ரலி).

Saturday, September 13, 2008

ஜைனப் (ரலி) அவர்களின் சிறப்பு.

1595. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?' எனக் கேட்டதற்கு, 'உங்களுள் கை நீளமானவரே!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஜைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஜைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்தால் தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.

புஹாரி :1420 ஆயிஷா (ரலி).

Monday, June 23, 2008

வேதக்காரர்களின் ஸலாமுக்கு எப்படி பதிலுரைப்பது?

1398. வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6258 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1399. யூதர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் அவர்களில் சிலர் 'அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதிலாக) 'வ அலைக்க' (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6257 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1400. யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர். 'வ அலைக்கு முஸ்ஸாமு வல்லஅனா'' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்றார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?' என்று கேட்டேன் அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நான் ('அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து) 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என பதிலளித்து விட்டேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி :6256 ஆயிஷா (ரலி).

Sunday, March 23, 2008

பைஅத்து ரிழ்வான் பற்றி...

1213. ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், 'பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்'' என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4154 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1214. (பைஅத்துர் ரிள்வான் என்னும் உறுதிப்பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை பார்த்திருக்கிறேன். பின்பு (ஒரு முறை) அங்கு வந்தேன். அப்போது என்னால் அதனை அறிய முடியவில்லை.

புஹாரி : 4162 ஸைது பின் அல் முஸய்யப் (ரலி).

1215. நான், ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களிடம், 'ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்'' என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், 'மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4169 யஜீத் பின் அபீ உபைத் (ரலி).

1216. 'ஹர்ரா' போரின்போது என்னிடம் ஒருவர் வந்து, 'அப்துல்லாஹ் இப்னு ஹன்ழலா (ரலி), மக்களிடம் மரணத்தைச் சந்திக்கத் தாயாராயிருக்கும் படி உறுதிமொழி வாங்குகிறார்கள்'' என்று கூறினார். அதற்கு நான், 'இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபிய்யாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்'' என்று கூறினேன்.

புஹாரி : 2959 அப்துல்லாஹ் பின் ஜைது (ரலி).

1217. நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் 'இப்னுல் அக்வஃ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை ஆயினும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்'' என்று சொன்னேன்.

புஹாரி :7087 ஸலமா பின் அக்வஹ் (ரலி).

Monday, April 23, 2007

மரணித்தவர் ஓய்வு பெறுதல்.

554.இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் '(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்'' என்றார்கள். மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் 'இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன'' என்றார்கள்.

புஹாரி :6512 அபூகதாதா (ரலி)

Sunday, April 22, 2007

மரணித்தவர் பற்றி....

மரணித்தவர் பற்றி புகழ்ந்தும் இகழ்ந்தும் கூறப்படுதல்.

553.ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது'' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள். உமர் (ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 1367 அனஸ் (ரலி)

Thursday, April 12, 2007

இறந்தவருக்காக அழுதல்.

531.தம் மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களின் மகள் (ஜைனப் (ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, 'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!'' என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅபு, ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர். (வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள். இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஅத் (ரலி) கேட்டதற்கு நபி (ஸல்), 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள்.

புஹாரி :1284 உஸாமா பின் ஜைது (ரலி)

532.ஸஅத் இப்னு உபாதா (ரலி) நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், 'என்ன? இறந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். 'இல்லை இறைத்தூதர் அவர்களே!' என்றனர். நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி (ஸல்) அவர்கள், '(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மய்யித் வேதனை செய்யப்படுகிறது'' என்று கூறினார்கள்.

புஹாரி :1304 இப்னு உமர் (ரலி)