மரணித்தவருக்கு சொர்க்கமா நரகமா என அறிவிக்கப் படுதல்.
1822. ''உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிறவரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :1379 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
1823. ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும்போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, 'யூதர்கள் அவர்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்'' எனக் கூறினார்கள்.
1824. ''ஒர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'இந்த மனிதரைப்பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான். அவனிடம் (நீகெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான். ''அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்'' என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 1374 அனஸ் (ரலி).
1825. கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரண்டு வானவர்களைக்) கொண்டு வரப்படும் (கேள்வி கேட்கப்படும்); பிறகு (அவர்களிடம்) அந்த இறைநம்பிக்கையாளர், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்'' என சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ் 'நம்பிக்கை கொள்கிறவர்களை இவ்வுலக சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்'' (திருக்குர்ஆன் 14:27) எனக் குறிப்பிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 1369 பராவு இப்னு ஆஸிப் (ரலி).
1826. பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில்; இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, 'இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை'' என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா (ரஹ்) கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி (ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.
புஹாரி :3976 அபூதல்ஹா (ரலி).
1827. 'நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) தமக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும்வரை மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். '(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, 'மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார்' என்று அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:08) கூறவில்லையா?' எனஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும், எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்து விடுவான்' என்று கூறினார்கள்''.
புஹாரி : 103 இப்னு அபீ முலைக்கா (ரலி).
1828. ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்காக ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7108 இப்னு உமர் (ரலி).
No comments:
Post a Comment