Showing posts with label உஹது. Show all posts
Showing posts with label உஹது. Show all posts

Friday, September 19, 2008

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களின் சிறப்பு

1606. உஹதுப் போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன். எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்தனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாவை தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (ஜனாஸா) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'யார் அந்தப் பெண்?' என வினவினார்கள். அம்ர்டைய மகள் என்றோ அல்லது அம்ர்டைய சகோதரி என்றோ (கூடியிருந்தோர்) கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'நீ ஏன் அழுகிறாய்? நீ அழுதாலும் அழாவிட்டாலும் ஜனாஸா உயர்த்தப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்'' என்றார்கள்.

புஹாரி : 1293 ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி).

Thursday, September 04, 2008

தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) சிறப்புகள்.

1563. நபி (ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை. இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) தல்ஹா (ரலி) மற்றும் ஸஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.

புஹாரி : 3723 அபூஉஸ்மான் (ரலி).

1564. அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி), 'நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)'' என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்க, ஸுபைர் (ரலி), 'நான்'' என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்'' என்று கூறினார்கள்.

புஹாரி: 2846 ஜாபிர் (ரலி)

1565. அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் (நபி - ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு... அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, 'என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்'' என்று சொன்னேன். அவர்கள், 'என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!'' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (பார்த்தேன்)'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, 'என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3720 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி).

Wednesday, September 03, 2008

ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1560. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, 'என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், 'யாரது?' என்று கேட்டார்கள். வந்தவர், 'நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.

புஹாரி : 2885 ஆயிஷா (ரலி).

1561. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறியதை கேட்டேன்.

புஹாரி : 2905 அலீ (ரலி).

1562. ''(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனச்) கூறினார்கள்'' என்று ஸஅத் (ரலி) சொல்ல கேட்டேன்.

புஹாரி : 3725 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

Tuesday, August 05, 2008

உஹதுப்போரில் ஜிப்ரீல்(அலை) மிக்காயீல் (அலை) மலக்குகள் போரிட்டது.

1488. உஹதுப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களை பார்த்தேன். அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை நிற உடையணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.

புஹாரி : 4054 ஸஆது பின் அபீவக்காஸ் (ரலி).

Wednesday, July 30, 2008

நபி (ஸல்) அவர்களின் கனவுகள்.

1463. 'நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது, 'வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!' என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''

புஹாரி : 246 இப்னு உமர் (ரலி).

1464. நான் மக்கா நகரைத் துறந்து அங்கிருந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி 'யமாமா'வாகவோ 'ஹஜரா'கவோ தான் இருக்கும் என்று நான் எண்ணினேன். ஆனால், அது யஸ்ரிப் -மதீனாவாகிவிட்டது. மேலும், இந்த என்னுடைய கனவில் நான் (என்னுடைய) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை உடைந்து விடுவதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போதுமுஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்தபடியே மீண்டும் (ஒட்டி) அழகாகியது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளைமாடுகளை பார்த்தேன். (உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த அந்தஸ்து (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்ததாகும்.எனவே, (அந்த மாடுகள்) உஹுதுப் போரின்போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3622 அபூ மூஸா(ரலி).

1465. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத் தூதர் என்று வாதிட்ட) 'முஸைலிமா' எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், 'முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்'' என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்சமட்டைத் துண்டு ஒன்று இருந்தது.

முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, 'இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச்செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர்தாம் ஸாபித் இவர் என் சார்பாக உனக்கு பதிலளிப்பார்'என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன்'' என்று (முஸைலிமாவிடம்) சொன்னார்கள்

புஹாரி :4373 இப்னுஅப்பாஸ் (ரலி).

1466. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனவே, கனவில் அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதினேன். உடனே, அவ்விரண்டும் பறந்துவிட்டன. எனவே, நான் அவ்விரண்டுக்கும் 'எனக்குப் பின் வெளிப்படவிருக்கிற மகா பொய்யர்கள் இருவர்' என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் அன்ஸீ மற்றொருவன் முஸைலிமா என்று கூறினார்கள்.

புஹாரி :4374 அபூஹூரைரா (ரலி).

1467. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்'' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்'' என்றனர்.

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், 'இவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள்,'செல்லுங்கள், செல்லுங்கள்'' என்று என்னிடம் கூறினர். அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்து வைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், 'இவ்விருவரும் யார்?' என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், 'இவர் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்'' என்று கூறினர். அப்படியே நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், 'இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், 'அதில் ஏறுங்கள்'' என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காண்கிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்'' என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசிங்கம் நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பி வந்தனர்.அவ்விருவரும் என்னிடம், 'இது (-இந்த நகரம்) தான் 'அத்ன்' எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்'' என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், 'இது உங்கள் இருப்பிடம்'' என்றனர். நான் அவர்களிடம், 'உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்'' என்றேன். அவ்விருவரும், 'இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்)அதில் நுழையத்தான் போகிறீர்கள்'' என்றனர். நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக்கண்டு உள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?'என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம்,'(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக் கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து) விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார். அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், 'இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)'' என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்'' என்று பதிலளித்தார்கள்.(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறு பாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்து விட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் (என்று கூறினர்).

புஹாரி : 7047 ஸமுரா பின் ஜூன்துப் (ரலி).

Sunday, March 02, 2008

உஹதுப்போர்.

1169. உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களின் நடுப் பல் உடைக்கப்பட்டுவிட்டபோது, அலீ (ரலி) (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் அவ்வப்போது தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா (ரலி) காயத்தைக் கழுவி வந்தார்கள். இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி), ஒரு பாயை எடுத்து அதை எரித்து, (அதன் சாம்பலை) நபி (ஸல்) அவர்களின் காயத்தின் மேல் வைத்து அழுத்தி விட, இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.

புஹாரி : 2903 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

1170. (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. 'அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, 'இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3477 இப்னு மஸ்ஊத் (ரலி).