Showing posts with label தீரம். Show all posts
Showing posts with label தீரம். Show all posts

Wednesday, September 03, 2008

ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1560. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, 'என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், 'யாரது?' என்று கேட்டார்கள். வந்தவர், 'நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.

புஹாரி : 2885 ஆயிஷா (ரலி).

1561. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறியதை கேட்டேன்.

புஹாரி : 2905 அலீ (ரலி).

1562. ''(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனச்) கூறினார்கள்'' என்று ஸஅத் (ரலி) சொல்ல கேட்டேன்.

புஹாரி : 3725 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

Wednesday, August 06, 2008

நபி (ஸல்) அவர்களின் தீரம்.

1489.நபி(ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்கு உள்ளானார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூ தல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், 'பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்'' என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். பிறகு, 'நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம்'' என்று கூறினார்கள். அல்லது, 'இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2908 அனஸ் (ரலி).