நபி (ஸல்), அவர்களின் குடும்பத்தாரின் உணவு!
1869. இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற் புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் புனிதப் போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப் போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா வாசிகளான) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால் நான் (இதுவரை) செய்து வந்த வழிபாடு வீணாகி நான் இழப்புக்குள்ளாகி விட்டேன் (போலும் என வருந்தினேன்).
புஹாரி : 6453 ஸஆது பின் அபீவக்காஸ் (ரலி).
1870. ''அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
புஹாரி : 6460 அபூஹூரைரா (ரலி).
1871. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
புஹாரி : 5416 ஆயிஷா (ரலி).
1872. முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நாளில் இரண்டு முறை உணவு உண்டால் அதில் ஒன்று (வெறும்) பேரீச்சம் பழமாகவே இருக்கும்.
புஹாரி : 6455 ஆயிஷா (ரலி).
1873. என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம் பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம் அப்படியிருந்தும் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான் என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்? ஏன்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றொன்று ) தண்ணீர். தவிர அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்தவதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.
புஹாரி : 2567 உர்வா (ரலி).
1874. இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
புஹாரி : 5374 ஆயிஷா (ரலி).
1875. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.
புஹாரி : 5383 அபூஹூரைரா (ரலி).
No comments:
Post a Comment