Showing posts with label தீர்ப்பு. Show all posts
Showing posts with label தீர்ப்பு. Show all posts

Saturday, November 08, 2008

மறுமை நாளின் அடையாளங்கள்.

1709. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .

புஹாரி : 80 அனஸ் (ரலி).

1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; 'ஹர்ஜ்' பெருகிவிடும். 'ஹர்ஜ்' என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7063 அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).

1711. நபி (ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெருகிவிடும்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'கொலை, கொலை'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 7061 அபூஹுரைரா (ரலி).

1712. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

புஹாரி : 100 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி).

Friday, August 22, 2008

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியம்.

1519. மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த 'ஹர்ரா' (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், 'தண்ணீரைத் திறந்து ஓடவிடு'' என்று கூறினார். ஸுபைர் (ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், 'ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்'' என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, 'உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?' என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து) விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, 'உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2359 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி).

1520 'இறைவன் மீதாணையாக! '(முஹம்மதே!) உங்களுடைய இறைவன் மீதுசத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றபின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 04: 65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்'' என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள்.

புஹாரி :2360 ஸுபைர்(ரலி).

Wednesday, April 30, 2008

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.

1301. 'போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 242 ஆயிஷா (ரலி).

1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, '(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)'' என்று (அறிவுரை) கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான 'பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4344 அபூபுர்தா (ரலி).