மறுமை நாளின் அடையாளங்கள்.
1709. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .
புஹாரி : 80 அனஸ் (ரலி).
1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; 'ஹர்ஜ்' பெருகிவிடும். 'ஹர்ஜ்' என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7063 அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).
1711. நபி (ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெருகிவிடும்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'கொலை, கொலை'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 7061 அபூஹுரைரா (ரலி).
1712. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.
புஹாரி : 100 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி).
No comments:
Post a Comment