குழந்தைகளின் மரணத்தில் பொறுமை காத்தவர் நிலை.
1689. ''ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1690.இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்து விடுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, 'உங்களில், தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகிற பெண்ணுக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்'' என்றார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலுமா?' என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, 'ஆம்; இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள்.
1691. 'பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''