Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

Friday, November 21, 2008

சேவல்கள் கூவக் கேட்டால்....

1740. நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவே தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவே தான் கத்துகிறது.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3303 அபூஹுரைரா (ரலி).

Saturday, November 15, 2008

அல்லாஹ்வை கூட்டமாக அமர்ந்து நினைவு கூர்தல்.

1722. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் 'உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்'' என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் 'என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?' என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனவான் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்'' என்று வானவர்கள் கூறுகின்றனர்.அதற்கு இறைவன், 'அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?' என்று கேட்பான். வானவர்கள், 'உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?' என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், 'அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்'' என்பார்கள். அதற்கு இறைவன், 'அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?' என்று கேட்பான். வானவர்கள், 'சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்'' என்று பதிலளிப்பார்கள். இறைவன், 'அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?' என்று வினவுவான். வானவர்கள், 'நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)'' என்று பதிலளிப்பார். இறைவன், 'அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?' என்று கேட்பான் வானவர்கள், 'நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்'' என்பர். அப்போது இறைவன், 'எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்'' என்று கூறுவான்.அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், '(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்'' என்பார். அதற்கு இறைவன், 'அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்'' என்று கூறுவான்.

புஹாரி :6408 அபூ ஹுரைரா (ரலி).

Wednesday, October 22, 2008

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்.

1676. மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6114 அபூ ஹுரைரா (ரலி).

1677. நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்'' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்'' என்றார்.

புஹாரி :6115 ஸூலைமான் பின் ஸூரத் (ரலி).

Saturday, October 11, 2008

உறவுகளைப் பேணுதல்.

1655. அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், 'என்ன?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்''என்று கூறியது. 'உன்னை(உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ் 'இது (அவ்வாறுதான்) நடக்கும்'' என்று கூறினான். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), 'நீங்கள் விரும்பினால் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4830 அபூஹூரைரா (ரலி).

1656. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5984 ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி).

1657. ''ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்'' என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!'என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2067 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

Saturday, July 19, 2008

பாம்புகளைக் கொல்லுதல் வேண்டும்.

1441. நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட ('தாத் துஃப்யத்தைன்' என்னும்) பாம்பையும் குட்டையான - அல்லது - சிதைந்த வால் கொண்ட ('அப்தர்' எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்'' என்று சொல்ல கேட்டேன். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா (ரலி) என்னைக் கூப்பிட்டு 'அதைக் கொல்லாதீர்கள்'' என்றார்கள். நான், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3297-3298 இப்னு உமர் (ரலி).

1442. நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, 'வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)'' எனும் (77 வது) அத்தியாயம் அருளப் பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன்னுடைய புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போதுஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4930 இப்னு மஸ்ஊது (ரலி).

Saturday, July 05, 2008

பாதுகாப்பு தேடும் குர்ஆனிய வசனங்கள்.

1415. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால், 'அல்முஅவ்விஃதாத்' (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் சுபிட்சத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.

புஹாரி : 5016 ஆயிஷா (ரலி).

Tuesday, March 11, 2008

ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் போரிடுதல்.

1187. உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூ தல்ஹா (ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள். மேலும், அபூதல்ஹா (ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், 'அதை அபூ தல்ஹாவிடம் போடு'' என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூ தல்ஹா அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்'' என்று கூறினார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

புஹாரி :3811 அனஸ் (ரலி).

Thursday, February 14, 2008

போர்க்களத்தில் பொறுமை.

1136. எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3026 அபூஹுரைரா (ரலி).

1137. நான் உமர் இப்னு உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) ஹரூரிய்யாவுக்குப் புறப்பட்டபோது கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்துக் காட்டினேன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:


இறைத்தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாள்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க்களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.


பிறகு, நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, 'எதிரிகளைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள். (வேறு வழியின்றி போர்க்களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். மேலும், 'சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது' என்பதை அறிந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு, 'இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! (குலங்கள் அனைத்தும் சேர்ந்து திரட்டி வந்துள்ள) படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

புஹாரி :3024-3025 ஸாலிம் அபூநள்ர் (ரலி).