Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Wednesday, January 28, 2009

(தஃப்ஸீர்) விரிவுரை. (இறுதிப் பதிவு)

1893. பனூ இஸ்ராயீல்களுக்கு, '(ஊருக்குள் நுழையும்போது) அதன்வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் 'ஹித்தத்துன்' ('பாவ மன்னிப்புக் கோருகிறோம்') என்று சொல்லியபடியும் நுழையுங்கள்'' என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்' என்னும் சொல்லை 'ஹின்தத்துன் - கோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய விதை என்று கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3403 அபூஹுரைரா (ரலி).

1894. அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து 'வஹீ' (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப் பெற்றதைவிட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

புஹாரி : 4982 அனஸ் (ரலி).

1895. 'யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர் (ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார் ''இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்'' (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர் (ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்'.'

புஹாரி : 45 உமர் (ரலி).

1896. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்'' (திருக்குர்ஆன் 04:03) என்னும் இறைவசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கிற - அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் - அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும். மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணந்து கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே அல்லாஹ், 'பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும் நினைவு படுத்துகிறான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, மேலும், எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவு படுத்துகிறான்)'' என்னும் (திருக் குர்ஆன் 04:127) வசனத்தை அல்லாஹ் அருளினான். மேலும், 'இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும்...'' என்று அல்லாஹ் கூறியிருப்பது, 'அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்.'' என்னும் (திருக்குர்ஆன் 04:03) இறைவசனத்தைக் குறிப்பதாகும். மேலும், 4:127ம் இறைவசனத்தில், 'மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ''என்று கூறியிருப்பது, உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த (அநாதை)ப் பெண்களை மணந்து கொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் 'நீதியான முறையிலே தவிர மணந்து கொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

புஹாரி : 2494 உர்வா பின் ஜூபைர் (ரலி).

1897. ''(அவ்வநாதைகளின் சொத்துக்களுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!'' என்ற (திருக் குர்ஆன் 04:06) இறை வசனம், அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தை)ப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அனாதைகளின் பொருளை உண்ணலாம்.

புஹாரி : 2212 ஆயிஷா (ரலி).

1898. ''ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறில்லை'' என்னும் (4:128) திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது ஆயிஷா (ரலி), 'ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத வயோதிகம் முதலியவற்றைக் கண்டு அவளைப் பிரிந்துவிட விரும்பும் நிலையில், அவள் 'என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக் கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்து விடு' என்று சொல்வதை இது குறிக்கும்'' என்று கூறிவிட்டு, 'இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால் தவறேதுமில்லை'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2694 ஆயிஷா (ரலி).

1899. இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டு விட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், 'ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறை நம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றி விடவில்லை'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4590 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).

1900. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், 'ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றியும், 'மேலும், (கொலை செய்யக்கூடாது என) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்'' என்று தொடங்கி 'பாவமன்னிப்புக் கோரி இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர் தவிர'' என்று முடியும் (திருக்குர்ஆன் 25:68-70) வசனங்கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நானே அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடைவிதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீயசெயல்கள் புரிந்தோம். (எனவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)'' என்று கூறிக் கொண்டனர். எனவே, அல்லாஹ் 'அவர்களில், மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரைத்தவிர. அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 25:70 வது) வசனத்தை அருளினான்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4765 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).

1901. ஒருவர் தன்னுடைய சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், 'அஸ்ஸலாமு அலைக்கும்'' (உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்று விட்டார்கள். அவரின் ஆட்டு மந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு ஸலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 04:94) (இங்கே 'உலகப் பொருள்' என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.

புஹாரி : 4591 இப்னு அப்பாஸ் (ரலி).

1902. அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது 'உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று. மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். எனவே, வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!'' (திருக்குர்ஆன் 02:189) என்ற இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்களின் விஷயத்தில் இறங்கியது.

புஹாரி : 1803 அபூ இஸ்ஹாக் (ரலி).

1903. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) 'இந்த இணைவைப்பாளர்கள் யாரை (க்கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களின் (உண்மையான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது யார் என்பதற்காக அவனுடைய நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 17:57 வது வசனம் குறித்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் 'ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தம் (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

புஹாரி :4714 இப்னு மஸ்ஊத் (ரலி).

1904. நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், 'அது (நயவஞ்சகர்களை)அம்பலப்படுத்தக் கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டு விட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்'' என்று கூறினார்கள். நான் அவர்களிடம் , 'அல் அன்ஃபால்' எனும் (8 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பத்ருப்போர் குறித்து அது அருளப்பெற்றது'' என்று பதிலளித்தார்கள். நான் 'அல்ஹஷ்ர்' எனும் (59 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4882 இப்னு அப்பாஸ் (ரலி).

1905. (என் தந்தை) உமர் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள் மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருள்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக் கூடியதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்து விட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:

1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ, மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவரின் பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?

2. 'கலாலா' என்றால் என்ன?

3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்

புஹாரி : 5588 இப்னு உமர் (ரலி).

1906. குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ் (ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே 'இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி : 3966 அபூதர் (ரலி).

அல்ஹம்துலில்லாஹ்! இறைவன் அருளால் இனிதே நிறைவுற்றது!!

Thursday, November 06, 2008

முத்தஸாபிஹாத் வசனங்கள் பற்றி....

அறிவு.

1705. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் 'கோணல்' உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ 'இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன' என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, 'முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி :4547 ஆயிஷா (ரலி).

1706. உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5060 ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் (ரலி).

1707. அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2457 ஆயிஷா (ரலி).

Saturday, July 05, 2008

பாதுகாப்பு தேடும் குர்ஆனிய வசனங்கள்.

1415. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால், 'அல்முஅவ்விஃதாத்' (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் சுபிட்சத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.

புஹாரி : 5016 ஆயிஷா (ரலி).

Tuesday, March 20, 2007

தொழுகையில் ஒரு ரக்அத்தில் ஓதும் குர்ஆனிய வசனங்கள்..

470. ஒருவர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து 'நான் முஃபஸ்ஸல்' அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதினேன்' என்றார். (முஃபஸ்ஸல் என்பது 'காஃப்' அத்தியாயம் முதல் குர்ஆனின் கடைசி வரை உள்ள அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களையும் ஒரே ரக்அத்தில் ஓதியதாகக் கூறிவிட்டு இது சரியா? என்று அவர் கேள்வி கேட்டார்.) 'கவிதைகளைப் படிப்பது போல் அவசரம் அவசரமாகப் படித்தீரா? நபி (ஸல்) அவர்கள் 'முஃபஸ்ஸல்' அத்தியாயங்களில் ஒரே மாதிரியான அளவில் அமைந்த இரண்டிரண்டு அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஒதியதை நான் அறிந்துள்ளேன்' என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் சேர்த்து ஓதிய முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களையும் குறிப்பிட்டார்கள்.

புஹாரி: 775 அபூவாயில் (ரலி)

471. (குர்ஆனின் 54 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள 'ஃபஹல் மின்(ம்) முத்தகிர்' எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) 'ஃபஹ்ல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள்.

புஹாரி ;4869 இப்னு மஸ்ஊத் (ரலி)

472. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா (ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள். பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?' என்று அபுத்தர்தா (ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'நாங்கள் அனைவரும் தாம்'' என்று பதிலளித்தோம். அபுத்தர்தா (ரலி), '(இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?' என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா (ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். 'வல்லைலி இஃதா யஃக்ஷா'' எனும் வசனத்தில் இப்னு மஸ்ஊத் (ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா (ரஹ்), 'வஃத்தகரி வல் உன்ஸா' என்றே ஓதினார்கள்'' என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா (ரலி), 'நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) 'வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா' என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைப் பின்பற்றமாட்டேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4944 இப்ராஹீம் (ரலி)

Monday, March 19, 2007

குர்ஆன் ஏழு வட்டார முறைகளில் அருளப்பட்டது..

468. ஹிஷாம் இப்னு ஹகீம் இப்னி ஹிஸாம் (ரலி) (திருக்குர்ஆனின்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகிற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம் (ரலி), அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களுக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன். (அவர்கள் தொழுது முடித்த) பிறகு, அவர்களின் போர்வை (போன்ற அங்கி)யை அவர்களின் கழுத்தில் போட்டு இழுத்து, அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, '(நபி (ஸல்) அவர்களே!) நீங்கள் எனக்கு ஓதிக் கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை கேட்டேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், 'அவரைவிட்டு விடு'' என்று கூறினார்கள். பிறகு என்னை நோக்கி, 'நீங்கள் ஓதுங்கள்'' என்று கூறினார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று. நிச்சயமாக, குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளின்படி இறக்கியருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு இலேசானதை அதிலிருந்து ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி :2419 உமர் (ரலி)
469. ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3219 இப்னு அப்பாஸ் (ரலி)

Saturday, March 17, 2007

சூரா பகராவின் இறுதி இரு வசனங்களின் சிறப்பு..

465. 'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4008 அபூ மஸ்ஊத் (ரலி)

Friday, March 16, 2007

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

463. ''எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்'' என்று கூறினார்கள். நான் 'அந்நிஸா' எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். 'ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போது (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?' எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது 'நிறுத்துங்கள்' என்று கூறினார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை கண்டேன்.

புஹாரி:5055 இப்னு மஸ்ஊத் (ரலி)

464. நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்து கொண்டிருந்தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்ஊத் (ரலி) 'யூசுஃப்' எனும் (12 வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர் (அதனை ஆட்சேபிக்கும் விதமாக) 'இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்படவில்லை'' என்று கூறினார். இப்னு மஸ்ஊத் (ரலி), '(இவ்வாறுதான்) நான் இறைத்தூதர் (ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், 'மிகச் சரியாக ஓதினாய்' என்று கூறினார்கள்'' என்று பதிலளித்தார்கள். அப்போது (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டார்கள். 'மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா?' என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை நிறைவேற்றும்படி செய்தார்கள்.

புஹாரி: 5001 அல்கமா (ரலி)

Thursday, March 15, 2007

குர்ஆனை ஓதுவதில் சிறந்தவரிடம் ஓதக்கூறுதல்..

462. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, 'வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும்வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..'' என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), 'என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.

புஹாரி:3809 அனஸ் (ரலி)

Wednesday, March 14, 2007

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..

458. ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் - ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) 'அல் கஹ்ஃப்' (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், 'இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்'' என்று கூறினார்கள்.

புஹாரி: 3614 பராஉ பின் ஆஸிப் (ரலி)

459. நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.காலை நேரமானதுபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)'' என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களை விட்டும் அது மறைந்திருக்காது'' என்று கூறினார்கள்.

புஹாரி:5018 உஸைத் இப்னு ஹூளைர் (ரலி)

Monday, March 12, 2007

மக்கா வெற்றி போது ஓதிய குர்ஆனிய வசனங்கள்..

457. ''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தம் ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி 'அல்ஃபதஹ்' என்னும் (48-வது) அத்தியாயத்தை 'தர்ஜுஉ' என்னும் ஓசை நயத்துடன் ஒதிக்கொண்டிருந்தததை கண்டேன்'' என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) கூற கேட்டேன். மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் என்றில்லாவிட்டால் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அவர்கள் 'தர்ஜுஉ' செய்து ஓதிக்காட்டியதைப் போல் நானும் ஓதிக்காட்டியிருப்பேன்.

புஹாரி:4281 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

Sunday, March 11, 2007

குர்ஆனை இனிய ராகத்துடன் ஓதுதல்..

455.அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அதனைச் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸலமா (ரஹ்) அவர்களின் தோழர் ஒருவர் (அப்துல் ஹமீத் இப்னு அப்திர் ரஹ்மான்) கூறுகிறார்: குர்ஆனை இனிமையாக ராகமாக ஓதுதலாகும்.

புஹாரி :5023 அபூஹூரைரா (ரலி)

456.நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) 'அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என என்னிடம் கூறினார்கள்.

புஹாரி:5048 அபூமூஸா (ரலி)

Saturday, March 10, 2007

குர்ஆனிய வசனங்கள் சில மறந்துவிடுதல் பற்றி..

451.ஒருவர் இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறக்க வைக்கப்பட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டி விட்டார்'' என்று கூறினார்கள்.

புஹாரி:5038 ஆயிஷா (ரலி)

452.குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர் தக்கவைத்துக் கொள்ளலாம். அதை அவிழ்த்து விட்டுவிட்டாலோ அது ஓடிப்போய்விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி:5031 இப்னுஉமர் (ரலி)

453.''இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்'' என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், 'மறக்க வைக்கப்பட்டுவிட்டது' என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி:5032 இப்னு மஸ்ஊத் (ரலி)

454.குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 5033 அபூ மூஸா (ரலி)