Showing posts with label பொறாமை. Show all posts
Showing posts with label பொறாமை. Show all posts

Monday, October 13, 2008

சந்தேகித்தல் உளவு பார்த்தல் பற்றி...

1660. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6066 அபூ ஹுரைரா (ரலி).

Sunday, October 12, 2008

பொறாமை கொள்ளாதே.

1658. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6065 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1659. ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர் தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6077 அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி).

Sunday, March 18, 2007

பொறாமை கொள்ளும் இரு விஷயங்கள்..

466. இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7529 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

467. 'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

புஹாரி :73 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)