Showing posts with label பெருநாள். Show all posts
Showing posts with label பெருநாள். Show all posts

Wednesday, April 23, 2008

அறுத்துப் பலியிடும் நேரம்.

ஈதுல் அல்ஹாவில் (ஹஜ்ஜூப் பெருநாள் தினம்) அறுக்கப்படும் பிராணிகள்.

1280. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். 'தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்'' என்றார்கள்.

புஹாரி : 985 ஜூன்துப் (ரலி).

1281. அபூ புர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், 'உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)'' என்று கூறினார்கள். அபூ புர்தா (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)'' என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது'' என்று சொல்லிவிட்டு, 'தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர் தமக்காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்து விட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5556 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1282. ''(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவர் திரும்பவும் அறுக்கட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது ஒருவர் எழுந்து 'மாமிசம் விரும்பி உண்ணக் கூடிய நாளாகும் இது. சதைப் பற்றுள்ள இரண்டு ஆடுகளை விட எனக்கு விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்றும் என்னிடம் உள்ளது' என்று கூறித் தம் அண்டை வீட்டார்(களுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது) பற்றியும் குறிப்பிட்டார். (தொழுகைக்கு முன்பே அறுப்பதற்கு மேற்கண்ட காரணங்களால் அவர் அனுமதி கேட்டார்) அவருக்கு நபி (ஸல்) சலுகை வழங்கினார்கள். இந்தச் சலுகை மற்றவர்களுக்கும் உண்டா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை.

புஹாரி : 954 அனஸ் (ரலி).

1283. நபி (ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 2300 உக்பா பின் ஆமிர் (ரலி).