Monday, December 15, 2008

ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்.

1793. ''இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப் படுவார்)'' என்று கூறினார்கள். மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)'' என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள் '(ஆம்) என்னையும் தான். அல்லாஹ் அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, '(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறி விடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்'' என்றார்கள்.

புஹாரி : 6463 அபூஹூரைரா (ரலி).

1794. நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6464 ஆயிஷா (ரலி).

1795. சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது 'நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கேட்பார்கள்.

புஹாரி : 1130 அல்முகீரா (ரலி).

1796. 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதை விட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்' என்றார்''.

புஹாரி : 70 அபூ வாயில் (ரலி).

No comments: