Sunday, December 14, 2008

இறை நம்பிக்கையாளன் நிராகரிப்பவனின் உதாரணம்.

1790. இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்து விடும். காற்று நின்று விட்டால், அது நேராக நிற்கும். சோதனையின் போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5644 அபூஹுரைரா (ரலி).

1791. இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5643 கஅப் பின் மாலிக் (ரலி).

1792. 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று நபி (ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'பேரீச்சை மரம்' என்றார்கள்'' .

புஹாரி : 61 இப்னு உமர் (ரலி).

No comments: